‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என வரிசையாக வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக மீண்டும் உயர்ந்திருக்கும் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை ‘யாத்திசை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கி வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சசிகுமார், சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஜே கே ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் நாயகனான சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இப்படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்தியாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களின் காலகட்டத்திய பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கதையின் நாயகனான சசிகுமார் கடற்படை அதிகாரியாக தோன்றுகிறார். மேலும் இப்படத்தில் அதிரடி எக்சன் காட்சிகளும் உள்ளன” என்றார்.
எழுபது சதவீத படபிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும்.. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.