சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான வணிக சந்தையை உருவாக்கும் நடிகரான ‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மருதம்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர்கள் சரவண சுப்பையா- பத்ரி வெங்கடேஷ் -சாட்டை அன்பழகன் -தனியார் பல்கலை கழக பேராசிரியர் திருமகன் -ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இயக்குநர் கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மருதம்’ திரைப்படத்தில் விதார்த், ரக்ஷனா, அருள் தாஸ், மாறன், சரவண சுப்பையா, ‘தினந்தோறும்’ நாகராஜ், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அறுவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. வெங்கடேசன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படக் குழுவினருடன் திரைப்பட துறையைச் சார்ந்த இயக்குநர்கள் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் கஜேந்திரன் பேசுகையில், ” தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தாலும்… இந்தப் படத்தை இயக்குவதற்காக எமக்கு மூன்று மாத காலம் விடுமுறை அளித்ததுடன்.. படத்தின் தொழில்நுட்ப பணிகளையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே மேற்கொள்வதற்கான வாய்ப்பினையும் வழங்கினர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு எம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் கதையில் விவசாயிகளின் நுட்பமான உணர்வை உள்வாங்கி அற்புதமாக வெளிப்படுத்திய விதார்த்துக்கும் என் நன்றி.
சமகாலத்தில் விவசாயியின் வாழ்க்கையை மையமாக வைத்து அடர்த்தியான திரைக்கதை மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.