பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 1986 ஆம் ஆண்டின் 04 இலக்க ஜனாதிபதிகளின் உரித்துக்களை இரத்துச் செய்யும் பொருட்டு ஆக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் அரச உத்தியோகபூர்வ இல்லம், மாதாந்த கொடுப்பனவு, செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு, உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு வசதி வழங்கள் என்பன இதனூடாக நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு செலுத்தப்பட்ட மாதாந்த கொடுப்பனவு இச்சட்டமூலத்தின் ஊடாக நிறுத்துவதற்கு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டு 04ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு இலக்க ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டம் என்று அடையாளப்படுத்தப்படும்.
(இதனகத்துப்பின்னர் ‘இரத்துச் செய்யப்பட்ட சட்டம்’ என்று அடையாளப்படுத்தப்படும்) 1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டம் இந்த சட்டமூலத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படும்.
1978 ஆம் ஆண்டு 36(2) பிரிவில் ஜனாதிபதியின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு ஆகியன பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் ஓய்வூதிய கொடுப்பனவும் பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
புதிய சட்டமூலத்தில் எவ்விடத்திலும் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாக குறிப்பிடப்படவில்லை.
1986ஆம் சட்டத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள்இ வாகனங்கள் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் மாத்திரமே இரத்துச் செய்யப்படவுள்ளன.
ஆகவே இந்த சட்டம் 1978 ஆம் ஆண்டு 36(2)ஆம் இலக்க சட்டத்துடன் முரண்படாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் இந்த சட்டமூலத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் உயர்நீதிமன்றத்தின் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகிறது.