பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சிசிசி மைதானத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற பகல் இரவு இறுதிப் போட்டியில் பவன் ரத்நாயக்க குவித்த ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் 187 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டிய கொழும்பு கிரிக்கெட் கழகம் (சிசிசி), பிரதான கழக 50 ஓவர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

பவன் ரத்நாயக்க 94 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களை விளாசி ஆட்டம் இழக்காமால் 158 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.
நிஷான் மதுஷ்க, கமிந்து மெண்டிஸ், அணித் தலைவர் சொனால் தினூஷ ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், இனூக்க கரன்னாகொட பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பனவும் சிசிசியின் வெற்றியில் பங்களிப்பு செய்திருந்தன.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சிசிசி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய போதிலும் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 387 ஓட்டங்களைக் குவித்தது.
லசித் குரூஸ்புள்ளே (0), தனஞ்சய டி சில்வா (2) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் நிஷான் மதுஷ்கவும் கமிந்து மெண்டிஸும் 3ஆவது விக்கெட்டில் 130 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப விழ்ச்சியை சீர்செய்தனர்.

நிஷான் மதுஷ்க 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 88 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 10 பவுண்டறிகளுடன் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்கள் இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (172 – 5 விக்.)
அதன் பின்னர் பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 126 பந்துகளில் 190 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகப் பலமான நிலையில் இட்டனர்.
சொனால் தினூஷ 53 ஓட்டங்களைப் பெற்றதுடன் சமிந்து விஜேசிங்க 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சாருக்க ஜயதிலக்க 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாருக்க ப்ரமோத் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
388 ஓட்டங்கள் என்ற கடுமையான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 40.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்ளைப் பெற்றது.

பொலிஸ் கழகம் சார்பாக எழுவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களில் இருவர் மாத்திரமே 30 ஓட்டங்களைக் கடந்தனர்.
ப்ரியமல் பெரேரா, ஜேசன் பெர்னாண்டோ ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் பொலிஸ் கழகம் ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது.
ப்ரியமல் பெரேரா (57), குசல் பெரேரா (31), ஜேசன் பெர்னாண்டோ (26), விஷாத் ரந்திக்க (22) ஆகிய நால்வர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் இனூக்க கரன்னாகொட 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சமிந்து விஜேசிங்க 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சம்பியனான சிசிசி அணிக்கு 3,000,000 ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற பொலிஸ் கழகத்துக்கு 2,500,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

ஆட்டநாயகன்: பவன் ரத்நாயக்க (சிசிசி) – 750,000 ரூபா

சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்: சங்கீத் குறே (கோல்ட்ஸ்) – 1,000,000 ரூபா

சிறந்த பந்துவீச்சாளர்: மொவின் சுபசிங்க (பிஆர்சி) – 1,000,000 ரூபா

தொடர்நாயகன்: நிஷான் மதுஷ்க (சிசிசி) – 1,500,000 ரூபா