வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில், ஐந்து பொலிஸார்களுக்கு காயம் ஏற்பட்டு, மூன்று பொலிஸ் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்றது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியோரமாக விழுந்து இறந்துள்ளார்.
குறித்த பகுதியில் மதுபானசாலை அமைந்திருந்த நிலையில் அதனை இலக்கு வைத்து வீதியில் நின்ற பொலிஸார் விரட்டிச் சென்றமையால் குறித்த நபர் விழுந்து இறந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்துக்குப் பிறகு, மதுபானசாலையிலிருந்து வெளியே வந்தவர்கள், சடலத்துக்கு அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸாரை தாக்கியுள்ளனர். இதில் நான்கு போக்குவரத்து பொலிசாஸாம் காயமடைந்ததுடன், அவர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.
பின்னர் கெப் ரக வாகனத்தில் வந்த மற்றொரு பொலிஸ் குழுவின்மீதும் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் அந்த வாகனமும் சேதமடைந்ததுடன், அதன் சாரதி ஒருவரும் காயமடைந்தார். நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட கூடுதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வைத்தியரான ப. சத்தியலிங்கம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, இறந்த நபரின் நிலையை உறுதி செய்தார்.
பின்னர் மரண விசாரணை அதிகாரி சுரேஜ், சடலத்தை பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மேலும் பதற்றமான சூழலை உருவாக்கினர்.
இதேவேளை, வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கிராம மக்கள் கூறியதாவது, “பொலிஸார் மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் கட்டையை வீசியதால் அந்த நபர் விழுந்து இறந்தார்” என்பதாகும். எனினும், அந்த சக்கரத்தில் எந்தவித சேதமும் இல்லையெனவும் பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டது. காயமடைந்த ஐந்து பொலிசாரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மதவாச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
சனிக்கிழமை (12) காலை தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். நீதிபதியும் நேரில் பார்வையிட்டு, விசாரணைகளை விரைவுபடுத்த பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
தற்போது, வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதோடு விசாரணைக்காக சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.