தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலொலி கொண்ட நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாம் ‘எனும் பெயரிடப்பட்ட திரைப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தினை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாம்’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பி. எம் . ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
அவல நகைச்சுவையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை கெம்பிரியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலான ‘பாம் ‘ என்பதற்குரிய காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
காளகம்மாய்பட்டி எனும் கற்பனையான நிலவியல் பகுதியில் இப்படத்தின் சம்பவங்கள் நடைபெறுகிறது. உயிரற்ற சடலமாக கருதப்படும் ஒருவருடைய உடலில் இருந்து பிரத்யேக ஓசையுடன் வாயு பிரிகிறது. இந்த அவல நகைச்சுவையை மையப்படுத்திய இந்த காணொளி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.