Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மாமன் – திரைப்பட விமர்சனம்

May 20, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சூரி நடிக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

தயாரிப்பு : லார்க் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ் கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், பால சரவணன், மாஸ்டர் பிரகீத் சிவன், பாபா பாஸ்கர் மற்றும் பலர்

இயக்கம் : பிரசாந்த் பாண்டியராஜ்

மதிப்பீடு : 2.5/5

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பிரபலமான ‘பரோட்டா’ சூரி-  ‘விடுதலை’ படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் உயர்ந்தார். தற்போது ‘மாமன்’ படத்தின் மூலம் கதாசிரியராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கதாசிரியர் -நகைச்சுவை நடிகர் – கதையின் நாயகன்-  என பன்முக திறமையை வெளிப்படுத்தும் சூரியின் ‘ மாமன்’  திரைப்படம் – உறவுகளை நேசிக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தில் மிகப்பெரிய மாநகரங்களில் ஒன்றான திருச்சியில் நொறுக்குத்தீனி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார் இன்பா( சூரி) . இவருக்கு கிரிஜா ( சுவாசிகா) என்றொரு சகோதரி இருக்கிறார்.

கிரிஜாவிற்கும், ரவி( பாபா பாஸ்கர்) க்கும் திருமணம் ஆகி பத்து ஆண்டுகளைக் கடந்த பிறகும் அவர்களுக்கு வாரிசு இல்லை. இதற்காக ரவியின் தாயார் ( கீதா கைலாசம்) மருமகளான கிரிஜாவை குறை சொல்லி வார்த்தைகளால் மனதை காயப்படுத்தி புண்படுத்திக் கொண்டே இருக்கிறார். 

இருந்தாலும் கிரிஜாவை தன்னுடைய பேரன்பால் தாங்கிக் கொள்கிறார் இன்பா. இன்பா தன் மீது காட்டும் அதீத பாசத்தால் நெகிழ்கிறார் கிரிஜா. இந்தத் தருணத்தில் கிரிஜா கருவுறுகிறார். இதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்தத் தருணத்தில் கிரிஜாவிற்கு வைத்திய பரிசோதனைக்காக வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறார் இன்பா. அங்கு உதவி வைத்தியராக பணிபுரியும் ரேகா( ஐஸ்வர்யா லட்சுமி) – சூரியின் பாசத்தால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். கிரிஜாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

மகிழ்ச்சியின் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற இன்பா-  தாய் மாமன் எனும் உறவால் நிலன் என பெயர் சூட்டப்பட்ட அந்தப் ஆண் பிள்ளையை மகிழ்ச்சியுடன் வளர்க்கத் தொடங்குகிறார். தன்னுடைய நாளாந்த கடமையை நிலனுடன் கழிக்கிறார் இன்பா.

இந்தத் தருணத்தில் நிலனும் வளர  இன்பா – ரேகாவின் காதலும் வளர்கிறது. இன்பா-  மதிப்புடனும், மரியாதையுடனும் பேணி பாதுகாத்து வரும் வாரிசுகள் இல்லாத சிங்கராயர் ( ராஜ் கிரண்)  –   பவுனு ( விஜி சந்திரசேகர்) தம்பதிகளின் ஆசியுடன் ரேகாவை திருமணம் செய்து கொள்கிறார்.

இந்தத் தருணத்தில் இவர்களுக்கு இடையூறாக நிலன் வருகிறார். தொடக்கத்தில் நிலனின் நடவடிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரேகா-  ஒரு கட்டத்தில் தன்னுடைய தேனிலவு பயணம் நிலனால் ரத்தானதால் தன் கணவரான இன்பாவுடன் கருத்து வேறுபாடு கொள்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகிறது. உறவுகளுக்குள் சிக்கல் எழுகிறது.  இதற்கான தீர்வு என்ன?  என்பதுதான் இப்படத்தின் கதை.

இன்றைய திகதியில் நாகரீக மோகத்தாலும் வெளிநாட்டு கலாச்சாரத்தின் மீதான ஈர்ப்பாலும் தமிழர்கள் – தங்களுடைய உறவு மேலாண்மை விடயங்களிலும் மற்றும் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் சிதைத்து விட்டு தனி மரமாகவும் உறவுகள் அற்ற குடும்ப அமைப்பையும் உருவாக்கி வருகிறார்கள்.

இது தொடர்பான சுய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், கடந்த தசாப்தங்களில் குடும்ப உறவுகளில் இருந்த உன்னதங்களை விவரிக்கும் வகையிலும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

குறிப்பாக டூ கே கிட்ஸ்களுக்கு தாய் மாமன் உறவு,உறவின் அன்பின் பகிர்தல் மற்றும் புரிதல்,விட்டுக் கொடுக்கும் குணம் ஆகியவை உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இது உறவுகளை நேசிக்கும் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைகிறது. உறவுகளை விரும்பாத பார்வையாளர்களுக்கு இதுபோன்ற உறவுகள் அமையவில்லையே என்ற ஏக்கத்தை உண்டாக்குகிறது. இதற்காக இயக்குநரையும் , கதாசிரியரையும் தாராளமாக பாராட்டலாம்.

அதே தருணத்தில் சினிமா என்பது வலிமையான – பார்வையாளர்களை எளிதில் ஆக்கிரமிக்கும் ஊடகம். இதில் எதனை சொன்னாலும் அதனை ஜனரஞ்சகத்துடன் தான் சொல்ல வேண்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் எழுதப்படாத மரபு. அந்த வகையில் இந்த மாமன்  பல பற்றாக்குறையால் தள்ளாடுகிறார்.

ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டால் போதும் என்று நினைத்திருக்கிறார்கள். இது தவறு.  அதேபோல் எக்சன் காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதால் அதுவும் ரசிகர்களை சோதிக்கிறது.

சூரி கதாசிரியர் என்பதால் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார். இவருக்கு நிகராக இவருடைய காதலியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் தன் நடிப்பால் கவர்கிறார்.

சகோதரியாக நடித்திருக்கும் நடிகை சுவாசிகா – மற்றும் நிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பிரகீத் சிவன் – ஆகிய இருவரும் தங்களது  நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்கள்.

குடும்ப உறவுகளைப் பற்றிய படம் என்பதால் – பின்னணி இசைக்கு உரிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்-  பாடல்களை ஒலிக்கச் செய்திருப்பது ஓர் எல்லைக்கு மேல் எரிச்சலை உண்டாக்குகிறது. இருப்பினும் மாமனை ஒளிப்பதிவாளர் – இயல்பான ஒளியமைப்புகளால் படத்தை ரசிக்க வைக்கிறார்.

முதல் பாதியில் தவறவிட்டாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை ஓரளவு ரசிக்கும் படியாகவே பயணிக்கிறது. ஆனால் எதிர்பார்த்தபடியே நகர்வதால் சற்று சோர்வும் ஏற்படுகிறது.

மாமன் – எமோஷனல் பூமர்

Previous Post

30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றிக் கொண்டாட்டமா? – மனோ கணேசன் கேள்வி 

Next Post

சங்கிலியன் மன்னனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 

Next Post
சங்கிலியன் மன்னனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 

சங்கிலியன் மன்னனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures