தமிழினப் படுகொலை வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (15) புதுக்குடியிருப்பு, கோம்பாவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இறுதி யுத்த காலமான 2009ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலை வாரமாக மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் தமிழினப் படுகொலை வாரம் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
2009இல் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகளை ஏற்படுத்தியது. இதனால் மக்களுக்கு உணவு, மருந்து எதுவுமே கிடைக்காத அந்த நாட்களில் தமிழ் மக்களின் உயிரை காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பிரதான உணவாக இருந்தது.
இந்த கஞ்சியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவேளைகளிலும் பொதுமக்கள் பலர் அரசு நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரலாற்று உண்மைகளை சர்வதேசத்துக்கும் எதிர்கால சந்ததிக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவே தமிழினப் படுகொலை வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது.