அறிமுக நடிகர் ஆதர்ஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘என் சுவாசமே’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான கே. ராஜன், இயக்குநர்கள் பேரரசு மற்றும் ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான மணி பிரசாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘என் சுவாசமே’ எனும் திரைப்படத்தில் ஆதர்ஷ், சாண்ட்ரா, லிவிங்ஸ்டன், அம்பிகா மோகன், கொளப்பள்ளி லீலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மணி பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜே இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை எஸ் வி கே ஏ மூவிஸ் பட நிறுவனம் சார்பில் சஞ்சய் குமார், அர்ஜுன் குமார், ஜனனி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் கோவிந்தராஜ் மற்றும் ரமேஷ் வெள்ளத்துரை ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பேசிய இயக்குநர் மணி பிரசாத் , ” மலையாளத் திரைப்படங்களைத் தமிழகத்தில் கொண்டாடுவது போல் தமிழ் திரைப்படங்களை கேரளத்தில் கொண்டாடுகிறார்கள். இந்தத் திரைப்படத்தின் பணிகளை தொடங்கும் போது எமக்கு குறைவான தருணங்களே இருந்ததனால், மலையாள கலைஞர்கள் அதிகளவில் பங்கு பற்றி நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு உங்களின் ஆதரவு வேண்டும்.”என்றார்.

