அகன்ற விழியாலும்… கம்பீரமான தோற்றத்தாலும்… வசீகரமான புன்னகையாலும்.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகர் கலையரசன் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வி’ ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினரை கௌரவப்படுத்தி இருக்கிறார்.
‘ஏண்டா தலையில எண்ணெய வைக்கல’, ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஹாட் ஸ்பாட்’ எனும் திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் செல்வம், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்திருக்கிறார். சமுதாய விழிப்புணர்வை முதன்மை படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியார் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் இந்த திரைப்படத்தை மை சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் வழங்குகிறார்.
மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” நடிகர் கலையரசன் ஓட்டோ ஓட்டுநராகவும், அவரது இளம் மனைவியாக கௌரி கிஷனும் நடித்திருக்கிறார்கள். எம்மைச் சுற்றி நாளாந்தம் நடைபெறும் சிறிய அளவிலான அநியாயங்களையும், மன்னிக்க இயலாத தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும்.
இல்லையெனில் அது எம்மையே பாதிக்கும் என்பதை இப்படத்தின் திரைக்கதை விவரிக்கிறது. இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் அனைவரும் தவறு நடந்தால் அந்த இடத்திலேயே அதனை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்க வேண்டும் என்ற துணிச்சலை இந்த படைப்பு ரசிகர்களின் மனதில் உண்டாக்கும்” என்றார்.













