நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றுவந்த மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது.

கிர்கிஸ்தானுக்கு எதிராக வார இறுதியில் நடைபெற்ற நிரல்படுத்தல் போட்டியில் அற்புதமாக விளையாடிய இலங்கை 3 நேர் செட்களில் வெற்றியீட்டி 5 ஆம் இடத்தைப் பெற்றது.
சிறந்த நுட்பத் திறனுடன் விளையாடிய இலங்கை மகளிர் அணி முதலாவது செட்டில் 25 – 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டில் கிர்கிஸ்தானிடம் அவ்வப்போது சவால்களை எதிர்கொண்ட இலங்கை ஒருவாறு 25 – 20 என வெற்றிபெற்று போட்டியில் 2 – 0 என்ற செட்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
மூன்றாவது செட்டில் மீண்டும் திறமையாக விளையாடிய இலங்கை அணி 25 – 14 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்று 5ஆம் இடத்தைப் பெற்றது.
எட்டு நாடுகள் பங்குபற்றிய மத்திய ஆசிய மகளிர் காரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தானை 3 நேர் செட்களில் (25 – 15, 25 – 22, 25 – 18) வெற்றிகொண்ட இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
உஸ்பெகிஸ்தானை 3 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வரவேற்பு நாடான நேபாளம் 3ஆம் இடத்தைப் பெற்றது.
இதேவேளை, நிரல்படுத்தல் போட்டியில் பங்களாதேஷை 3 – 1 செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட மாலைதீவுகள் 7ஆம் இடத்தைப் பெற்றது.