பிரபல ஊடகத்துறை அதிபர் ரூபர்ட் முர்டோக் 92 வயதில் 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளார்.
அவுஸ்திரேலியரான ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமாக பல்வேறு நாடுகளில் பத்திரிகைள், இலத்திரனியல் ஊடகங்கள் உள்ளன. அவரின் செல்வ மதிப்பு 20 பில்லியன் டொலர்கள் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது.
தற்போது 92 வயதான அவர், 5 ஆவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தனது சொந்தப் பத்திரிகைகளில் ஒன்றான நியூ யோர்க் போஸ்ட்டுக்கு நேற்று அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.
66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் எனும் பெண்ணுக்கும் ரூபர்ட் முர்டோக்குக்கும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றள்ளது. ஆன் லெஸ்லி ஸ்மித், அமெரிக்கப் பாடகர் செஸ்ட்டர் ஸ்மித்தின் விதவை மனைவி ஆவார்.
‘நான் மிக பதற்றமாக உணர்ந்தேன். காதலில் வீழ்வது குறித்து நான் அச்சமடைந்திருந்தேன். ஆனால், இதுவே கடைசி என நான் அறிவேன். நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’ என ரூபரட் முர்டோக் கூறியுள்ளார்.
கடந்த வருடம் கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஆன் ஸ்மித்தை தான் சந்தித்ததாகவும், அதன்பின் தமது வாழ்க்கையின் இரண்டாவது அரைப்பகுதியை இணைந்து வாழ்வதவற்கு இருவரும் விரைவில் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.