புதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் இப்படத்தின் படபிடிப்பை. இயக்குநர் சுசீந்திரன் தொடங்கி வைத்தார்.
எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘வடக்கன்’. இதில் அறிமுக நடிகர் குங்குமராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை வைரமாலா நடிக்கிறார்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஜெ. ஜனனி இசையமைக்கிறார். இன்றைய தமிழகத்தின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் புத்தகப் பதிப்பாளரும், எழுத்தாளருமான மு. வேடியப்பன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படப்பிடிப்புடன் தொடங்கியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் புகையிரதம் ஒன்றில் ஏராளமான இளம் தலைமுறையினர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பது போல் ஃபர்ஸ்ட் லுக் இடம் பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
