உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி வகுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு போதுமான காலவகாசம் வழங்கியுள்ளது.
தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்த நிலையில் தான் ஆணைக்குழு எதிர்வரும் வாரம் வேட்புமனுத்தாக்கலை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சோமாலிய கடற்கொள்ளையர்களை போல் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ள ஜனாதிபதி உட்பட ஆளும் தரப்பினரால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. ஏனெனில் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது. ஆகவே தமக்காக ஆட்சி நிர்வாகத்தை தெரிவு செய்ய அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கபட்டிருக்க வேண்டும்.
இருப்பினும் முன்னாள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அமைச்சின் அதிகாரங்களை கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போட்டார்.
நாட்டு மக்கள் நான்கு வருட பதவி கால அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கிறார்கள்.
ஆனால் தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் ஐந்து ஆண்டு காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பல்வேறு சூழ்ச்சிகளை பிரயோகித்த வண்ணம் உள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினரது மக்களாணை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவே மக்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கினார்கள். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவிற்கும், அரசாங்கத்திற்கும் மக்களாணை கிடையாது.
மக்களாணையை எதிர்கொள்ள அச்சமடைந்து அரசாங்கம் தேர்தலை பிற்போட தொடர்ந்து முயற்சிக்கிறது.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
உண்மை மக்களாணையை தடுக்க ஜனாதிபதி உட்பட அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற பிறிதொரு பிரச்சினையை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் தமது செல்வாக்கு சிதைவடைந்து செல்கிறது என்பதை ராஜபக்ஷர்கள் அறிந்தால் அவர்கள் தேர்தலை நடத்தமாட்டார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முழு அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி உரித்தாக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி வெளியிடுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொள்ள ஆணைக்குழு உரிய காலவகாசம் வழங்கியுள்ளது.எல்லை நிர்ணயம்,தேர்தல் முறைமை ஊடாக தேர்தலை பிற்போட அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆணைக்குழு இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது.தேர்தலை நடத்துவதை தவிரவேறு வழியில்லை என்ற நிலையை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்கொண்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.மக்களாணையுடன் விளையாடுவதை ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.பொதுத்தேர்தல் ஊடாக புறக்கணிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலையை இந்த தேர்தல் ஊடாக தெரிந்துக் கொள்ள முடியும்.ராஜபக்ஷர்களின் பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 08 ஆம்(டிசம்பர்)திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.அடுத்த ஆண்டுக்கான அரச செலவினம் 7,900 பில்லியன் ரூபாவாகும்.
இவ்வாறான நிலையில் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.தேர்தலுக்கு நிதி இல்லை என்று குறிப்பிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான ரங்கே பண்டார,அகிலவிராஜ் காரியவசம் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை,ஏனெனில் இவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல,மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.
நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,பாராளுமன்றம் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தலை நடத்தினால் பொருளாதார முன்னேற்ற திட்டங்கள் பாதிக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.பொருளாதாரம் எந்த மட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை மக்களிடம் கேட்டால் அவர்கள் நன்றாக குறிப்பிடுவார்கள்.
ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிப்பதும்,பெறுமதி சேர் மற்றும் சமூக பாதுகாப்பு அறவீட்டு தொகை ஆகிய வரிகளை கடுமையாக அமுல்படுத்துவது பொருளாதார முன்னேற்றமாகுமா,மக்களாணையுடன் தோற்றம் பெறும் அரசாங்கத்தினால்; தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.பொருளாதாரத்தை சீரழித்தவர்களால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் கப்பலை கைப்பற்றியது போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பொதுஜன பெரமுனவினர் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளார்கள்.கொள்ளையர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது,ஆகவே தமக்கான ஆட்சியை உருவாக்கிக் கொள்ள அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.