மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.
போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்டம் மழையினால் நிறுத்தப்பட்டபோது தென் ஆபிரிக்கா அதன் 2ஆவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதமிருக்க, இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 371 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதமிருப்பதால் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தென்படுகிறது.
போட்டியின் 3ஆம் நாளான இன்று புதன்கிழமை (28) காலை 3 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, 8 விக்கெட்களை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
போட்டியின் 2ஆம் நாள் ஆட்த்தின் கடைசி கட்டத்தில் உபாதை காரணமாக தற்காலிக ஓய்வு பெற்ற டேவிட் வோர்னரும் கெமரன் க்றீனும் இன்றைய தினம் மீண்டும் துடுப்பெடுத்தாடினர்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது டெஸ்டில் இரட்டைச் சதம் குவித்த 2ஆவது வீரரான டேவிட் வோர்னர் மேலதிக ஓட்டம் பெறாமல் 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவருக்கு முன்பதாக ட்ரவிஸ் ஹெட் 51 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தார்.
உபாதையிலிருந்து மீண்டுவந்து துடுப்பெடுத்தாடிய கெமரன் க்றீன் அரைச் சதம் பெற்றதுடன் கன்னிச் சதம் குவித்த அலெக்ஸ் கேரியுடன் 117 ஓட்டங்களை 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்தார்.
அலெக்ஸ் கேரி 111 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க கெமரன் க்றீன் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். அவர் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
நெதன் லயன் 25 ஓட்டங்களையும் மிச்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோக்கியா 92 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 7 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்து ஆட்டம் நடைபெறாததால் 3ஆம் நாள் ஆட்டத்தில் 28 ஓவர்கள் வீசப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.