ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தற்கொலை முயற்சி?
தென்னாப்பிரிக்கா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது மணிக்கட்டினை வெட்டி கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தற்போது அவர் சிறைக்கு திரும்பியுள்ளதாக சிறை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிஸ்டோரியஸ் இரு கால்களையும் இழந்த நிலையில் பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்பினை சுட்டு கொன்ற வழக்கில், கடந்த ஜூலையில் அவருக்கு 6 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதைதொடர்ந்து அவர் பிரிட்டோரியாவில் உள்ள Kgosi Mampuru சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் பிஸ்டோரியஸ், தான் தற்கொலைக்கு முயலவில்லை எனவும், படுக்கையிலிருந்து விழுந்ததினால் காயம் ஏற்பட்டது என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
சிறைதுறை அதிகாரிகளும் அவர் படுக்கையிலிருந்து விழுந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
பிஸ்டோரியஸின் குடும்ப செய்தி தொடர்பாளர், சம்பவம் பற்றி எந்த தகவலையும் எங்களால் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுத்துள்ளதாக சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.