9/11 இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான ‘கோப்பு எண் 17’ வெளியிடும் ரகசிய தகவல்கள்
9/11 என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கோப்பு எண் 17-ன் மூலம் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா இந்தக் கோப்பை அமைதியாக வெளியிடப்படுவதற்கான ஆவணமாக்கியுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியாவுடனான தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
‘தீவிரமான சவுதி ஆதரவு அமைப்பு’
“பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் தீவிர சவுதி ஆதரவு இருந்துள்ளது. கோப்பு எண் 17-ல் கூடுதலாக விடை தெரியாத சில கேள்விகல் எழுந்துள்ளன. 9/11 பற்றி இப்படித்தான் நாங்கள் சிந்திக்கிறோம் என்பதற்கான கோப்பு இது, எஃப்.பி.ஐ. மற்றும் சிஐஏ இந்தக் கேள்விகளுக்கு விடை காணுவது அவசியம்” என்று காங்கிரஸ் விசாரணை கமிட்டியின் துணைத் தலைவர் பாப் கிரகாம் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் அயலுறவு அமைச்சர் அடில் அல் ஜுபைர் கடந்த மாதம் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார்.
முன்னாள் அதிபர் புஷ் காலக்கட்டத்தில் 28 பக்க ஆவணம், ரகசிய ஆவணமாக, பாதுகாப்புக்குரிய ஆவணமாக வெளியிடப்படக் கூடாத ஆவணமாக ஆக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவுக்கும் சவுதிக்கும் உள்ள நெருக்கமான உறவுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர் கருதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக 9/11 தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தார் கொடுத்த நெருக்கடியினால் அதிபர் ஒபாமா அந்த 28 பக்க ஆவணத்தை வெளியிடுவதற்குரிய ஆவணமாக மாற்றுவதற்கான சீராய்வை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஆவணத்தில் உள்ள பெயர்களில் சவுதி தூதர்கள்
முதலில் 28 பேஜஸ்.ஆர்கில் வெளியிட்ட கோப்பு எண் 17 விமானக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற பெயர் விவரங்களை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக இவர்கள் அமெரிக்காவில் யார் யாரைத் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்த சில பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் சவுதி தூதர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் சவுதி அதிகாரிகள் இந்தச் சதியை அறிந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் 9/11 விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை, “சவுதி அரசு ஒரு நிறுவனமாக அல்லது மூத்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையிலோ அல்-கய்தாவுக்கு நிதி வழங்கியதற்கான ஆதாரங்கள் இல்லை” என்று கூறியிருந்தது. ஆனாலும், “சவுதி அரசின் குறிப்பிட்ட ஸ்பான்சர்ஷிப் கொண்ட அறக்கட்டளைகள் தங்கள் நிதியை அல் கய்தாவுக்கு வழங்கியிருக்கலாம் என்ற சாத்தியம் இருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தது, அதாவது ஆதாரமின்மை இந்த சாத்தியப்பாட்டை விலக்கவில்லை என்று இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எது எப்படியிருந்தாலும் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க விசாரணையாளர்கள் விசாரித்த சில முக்கிய சவுதி அதிகாரிகள் குறித்த தகவல்கள் இனி வெளியாகும் வாய்ப்புள்ளது.
இமாம் உதவினாரா?
கலிபோர்னியா, கல்வர் சிட்டியில் உள்ள கிங் ஃபஹாத் மசூதியின் இமாம் ஃபஹாத் அல் துமைரி என்பவர் விமானக் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த பிறகு உதவியதாக சந்தேகம் எழுந்தது. இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சவுதி தூதரகத்தில் சவுதி அங்கீகரித்த தூதராக 1996 முதல் 2003 வரை இருந்துள்ளார்.
இவரைப் பற்றி 9/11 கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிடும்போது மசூதியில் தீவிரவாதப் பிரிவு ஒன்றை நடத்தி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், மேலும் ஜிகாத்தை தான் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சவுதியைச் சேர்ந்த ஓமர் அல் பயோமி என்பவரை இந்த அல் துமைரி பிப்ரவரி 2000-த்தில் உணவு விடுதியில் வைத்துச் சந்தித்துள்ளார். இதன் பிறகே அல் பயோமி விமானக் கடத்தல் 9/11 தீவிரவாதிகளைச் சந்தித்திருக்கிறார். விசாரணையாளர்கள் அல் துமைரியை துருவிய போது அல் பயோமியைச் சந்தித்ததேயில்லை என்று கூறியிருக்கிறார், ஆனால் 1998-ல் இருவரும் ஏகப்பட்ட முறை தொலைபேசியில் உரையாடியுள்ளனர், குறிப்பாக 2000-ம் ஆண்டு டிசம்பர் 3 முதல் டிசம்பர் 20 வரை 11 முறை அல் துமைரி, பயோமி தொலை உரையாடல் நடைபெற்றுள்ளது. இவர் சந்திக்கவேயில்லை என்று கூறிய அதே வேளையில் அல் பயோமி சந்தித்தோம் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.
அல் கய்தா தீவிரவாதியின் ஈடுபாடு:
மார்ச் 19, 2004 தேதியிட்ட சிஐஏ ஆவணத்தின்படி, கலாத் பின் அட்டாஷ் என்ற அல் கய்தா தீவிரவாதி ஜூன் 2000-ல் 2 வாரங்கள் லாஸ் ஏஞ்சல்சில் தங்கியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சன்னி தீவிரவாதக் குழுக்களுடன் இவரைப் பார்த்ததாக தெரிவித்துள்ளது, அல் துமைரிக்கும் இவரைத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2003 மே 6-ம் தேதி அல் துமைரி சவுதி அரேபியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளார் ஆனால் இவருக்கு தீவிரவாத தொடர்பிருப்பதாக நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே சவுதி குடிமகன் அல் பயோமியிடம் 9/11 தாக்குதல் தீவிரவாதிகள் தங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சரிப்பட்டு வராது என்று கூறியதையடுத்து அல் பயோமி அவர்களை சான் டீகோவுக்கு அழைத்துச் சென்று அங்கு குடியிருப்பு ஒன்றை குத்தகைக்கும் எடுத்துக் கொடுத்துள்ளார்.
அல் பயோமிக்கு சவுதி அரசாங்கத்துடன் ஆழமான உறவுகள் உள்ளது என்றும் சான் டீகோ முஸ்லிம் சமுதாயத்தினர் அல் பயோமியை சவுதி உளவுத்துறை அதிகாரி என்றே கருதியிருந்ததாக காங்கிரஸ் விசாரணை ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
மேலும் அல் பயோமி அங்கு ஒரு ‘கோஸ்ட் வொர்க்கர்’ என்ற தகுதியில் பணியாற்றியுள்ளார், அதாவது சவுதி சிவில் ஏவியேஷன் கிளை நிறுவனமான எர்கானில் பணியாற்றியதாகக் காட்டப்பட்டுள்ளது, அதாவது இவர் பே ரோலில் இருப்பார் ஆனால் பணியாற்றத் தேவையில்லை.
ஒசாமாவை ஆதரித்த இன்னொரு ஒசாமா
அல் பயோமியிடம் நெருக்கமாக இருந்த ஒசாமா பாஸ்னன் சாண்டீகோவில் அதே தெருவில் வேறொரு இடத்தில் இருந்து கொண்டு 9/11 விமானக் கடத்தல் பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்துள்ளார். ஒசாமா பாஸ்னன் ஒசாமா பின்லேடனின் உரத்த ஆதரவாளர். இந்த பாஸ்னன் வாஷிங்டனில் சவுதி அரசின் கல்வித் திட்ட முன்னாள் அதிகாரி. இவருக்கு இளவரசி ஹைஃபா அல்-பைசலிடமிருந்து போதுமான நிதி வந்து சேர்ந்துள்ளது. இவர் முன்னால் சவுதி அரேபிய உளவுத்துறஒ தலைவரும் 1983 முதல் 2005 வரை அமெரிக்காவில் சவுதி தூதரக அதிகாரியாக பணியாற்றிய இளவரசர் பந்தார் பின் சுல்தான் என்பவரது மனைவியுமாவார். இந்த நிதியுதவி பாஸ்னனின் நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு அளிக்கப்படும் மருத்துவ செலவுகளுக்கானது என்று கூறப்பட்டது. ஆனால் 9/11 கமிஷன் இந்த நிதி பயங்கரவாதம் நோக்கி திருப்பப் பட்டதாகக் கூறவில்லை.
இந்நிலையில் இந்த கோப்பு எண் 17 அமெரிக்காவில் சிலபல அரசியல் விவகாரங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.