தெலுங்குத் திரையுலகத்தின் அடுத்த பிரம்மாண்ட வெளியீடாக அக்டோபர் 2ம் தேதி சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘சைரா’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கிலிருந்து, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
சிரஞ்சீவி ஏற்கெனவே ‘பிரதிபாந்த், ஆஜ்கா குண்டராஜ், தி ஜென்டில்மேன்’ ஆகிய நேரடி ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். அதனால், அவரைப் பற்றி ஹிந்தி ரசிகர்களுக்கும் தெரியும். மேலும், சிரஞ்சீவியின் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள ‘சைரா’ படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாகிறது. இப்படத்தின் ஹிந்தி டிரைலருக்கு, தெலுங்கு டிரைலரை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆகையால் இந்தப் படத்தை ஹிந்தியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். பர்ஹான் அக்தர், ரிதேஷ் ஷித்வானி ஆகியோர் தான் ஹிந்தி சைராவின் வினியோகஸ்தர்கள் ஆவர்.
விரைவில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிரஞ்சீவி மும்பை செல்ல உள்ளார்.