ஹார்ட்டிலே பற்றரி – இணையத் தொடர் விமர்சனம்
டிஜிட்டல் தளம் : ஜீ 5
வெளியீட்டு திகதி : டிசம்பர் 16, 2025
தயாரிப்பு : எலிசியம் மேக்சிமா & அல்லோ மீடியா
நடிகர்கள் : குரு லக்ஷ்மன், பாடினி குமார், சுமித்ரா தேவி, அனித் யாஷ், பால், யோகா லட்சுமி, ஜீவா ரவி, ஷர்மிளா, பிரவீணா பிரின்ஸி, கலை, சீனு மற்றும் பலர்.
இயக்கம்: சதாசிவம் செந்தில் ராஜன்
வகைமை: அறிவியல் புனைகதை
அத்தியாயங்கள் : ஆறு
மதிப்பீடு : 3/5
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாவனை உலகம் முழுவதும் மும்மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மனிதர்களின் சிந்தனையையும், எண்ணவோட்டத்தையும் துல்லியமாக அவதானிப்பதற்கான முயற்சிகளில் விஞ்ஞானம் தீவிரமாக ஈடுபட்டு வரும் தருணத்தில்… வாழ்க்கைக்கு அதிலும் குறிப்பாக நீர்க்குமிழி போல் குறுகிய ஆயுள் கொண்ட இளமைக் காலத்தில் ஆண்- பெண் என இரு பாலினத்தவர்களுக்கும் உச்சபட்ச இலக்காக இருக்கும் ‘காதல்’ எனும் அன்பினை- அன்பின் அளவினை – விஞ்ஞான ரீதியாக … எம்முடைய சிந்தனைக்கு உட்பட்ட எல்லையில் நின்று.. விஞ்ஞான ரீதியாக அளவிட இயலுமா? என்ற வினாவை எழுப்பி, அதற்கான விடையை விவரித்திருப்பது தான் ‘ஹார்டிலே பற்றரி’ எனும் இணையத் தொடரின் மையப்புள்ளி என இணைய தொடர் குழுவினர் இந்த தொடர் ஒளிபரப்பிற்கு முன்னரே டிஜிட்டல் தள ரசிகர்களிடத்தில் எடுத்துரைத்தனர். அவர்களின் முயற்சி ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கருத்து வேறுபாடு காரணமாக திருமண பந்தத்தில் இருந்து வெளியேறிய பெற்றோர்களின் ஒற்றை பிள்ளையான சோபியா ( பாடினி குமார்) பகிர்ந்து கொள்ளப்படாத அன்பின் காரணமாகவே எம்முடைய பெற்றோர்கள் எம்மை விட்டு விலகி சென்று விட்டனர். எம்மை போல் பலரும் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் தவிக்க கூடாது என்பதற்காக.. அவருக்கு சிறிய வயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மீதான ஆர்வம் காரணமாக… ‘லவ் மீற்றர்’ எனும் ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். இந்த கருவி மீது ஒருவருடைய கட்டை விரல் ரேகையை வைத்த உடன் அவர் மீது அன்பு செலுத்தும் நபர் மீதான அவரின் அன்பின் அளவை அந்தக் கருவி துல்லியமாக அவதானித்து தெரிவித்து விடும். இதனை அந்தக் கருவியை உருவாக்கிய சோபியா உறுதியாக நம்புகிறார்.
கற்பனையான கதாபாத்திரங்களை பொழுதுபோக்கு அம்சத்திற்காக கேலிச் சித்திரமாக வரையும் கலைஞர் சித்து( குரு லக்ஷ்மன் ). மற்றவர்களின் உணர்வுகளை எவராலும் துல்லியமாக அவதானிக்க இயலாது என்ற கருத்தியலில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.
இந்த இரண்டு நேர் எதிர் குணங்களைக் கொண்ட இரு எதிர் பாலினத்தவர்களும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள். அந்தத் தருணத்தில் நான் கண்டறிந்திருக்கும் இந்த லவ் மீற்றர் எனும் கருவி வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றுமே தவிர ஒருபோதும் துன்பத்தை வழங்காது என உறுதியாக கூற.. நாயகனோ ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு – நட்பா? காதலா? என துல்லியமாக எந்த கருவியாலும் அவதானிக்க இயலாது என உறுதியாக கூற.. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் புரிதல் நட்பா? காதலா? என இருவரும் பிரத்யேகமாக உணர்ந்து கொள்கிறார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
மலையாள நடிகர் பிருத்விராஜின் இளம் தோற்றத்தை நினைவு படுத்தும் வகையில் சித் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் குரு லக்ஷ்மன் கதாபாத்திரத்தின் உணர்வை துல்லியமாக உட் கிரகித்து பல காட்சிகளில் நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார் குறிப்பாக பெண் ரசிகைகளின் மனதில் பதிகிறார்.
சிகை அலங்காரம் காரணமாக ‘ பொம்பள யோகி பாபு’ என ஒரு பிரிவினரால் வர்ணிக்கப்பட்டாலும் சிண்ட்ரெல்லா @சோபியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பாடினி குமார் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றாலும்.. அவருடைய உடல் மொழி பல தருணங்களில் தடுமாறுவதை எளிதாக காண முடிகிறது.
இணையத் தொடர் என்றாலும்.. டிஜிட்டல் தள ரசிகர்களை ரசிகர்களின் கவனத்தை சிதற விடாமல்.. ஆறு அத்தியாயங்களில் தன்னுடைய ஆதிக்கத்தை விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் கையாண்டிருக்கிறார் இயக்குநரும் , எழுத்தாளருமான சதாசிவம் செந்தில் ராஜன்.
இலத்திரனியல் சாதனங்களின் பாவனை குறித்த இவரது எண்ணங்கள் வியப்பை அளித்தாலும்.. காதல்தான் அன்பு தான் அனைத்தையும் விட பெரிது என உணர்த்தி இருப்பதால் ரசிக்கவும் முடிகிறது.
ஒளிப்பதிவு – படத்தொகுப்பு- கலை இயக்கம் – பின்னணி இசை- என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருப்பதால்… ரசிகர்கள் இந்த இணையத் தொடரை மீண்டும் மீண்டும் ரசிக்கலாம் என்ற பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள்.
ஹார்ட்டிலே பற்றரி – நான்- ஸ்டாப் எனர்ஜி

