நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நான்; செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது அடிப்படையற்றது. உண்மைக்குப் புறம்பானது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் பிரதேச மக்கள் மறுத்துள்ளனர்.
அமைச்சரின் குற்றச்சாட்டினை அடுத்து பிரதேச மக்களுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , உப தவிசாளர் ஜனார்த்தனன், வட்டார உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட மேலும் பலர் பகிரங்க மக்கள் சந்திப்பினை நடத்தியதுடன் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்டுள்ள தரப்புக்களின் நிலைமைகளை மக்களுடன் நேரில் ஆராய்ந்தனர். அதன் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,
வெள்ளத்தினை அகற்றவதில் அனர்த்த முகாமைத்துவக் கொள்கை ரீதியில் உடனடி பாதிப்புக்களை நிவர்த்தித்தல் மற்றும் பாதிப்புக்களை குறைத்தல், நிலைத்தகு தீர்வு நடவடிக்கைக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்ததல் என்ற நடவடிக்கைகளிலேயே நாம் ஈடுபடுகின்றோம்.
இந் நிலையில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் நான் வெள்ளத்தினை மறித்து அணை கட்டியுள்ளதாக சாடியுள்ளார். அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக சந்திக்காது ஒரிருவர் ஊடாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். அல்லது அரசியல் ரீதியில் என்மீது சேறுபூசமுயற்சித்துள்ளார்.
இங்கு பிரதேச வாதங்கள் எமக்குக் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களிடத்தில் அவர்களாக அக ரீதியில் சிறு மண் அணை ஏற்படுத்தப்பட்டு ஒரு பகுதிக்குள் முழுமையாக வெள்ளத்தாக்கம் ஏற்பாடுத்தப்படாது இரு பகுதியிடத்திலும் வெள்ள நீர் சமநிலைப்பகிர்வு ஒன்று நடந்துள்ளது.
ஏற்கனவே வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான கல்வியங்காட்டின் ஒரு பகுதிக்குள் சகல வெள்ளத்தினையும் விட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களை வீடுகளில் குடியிருக்க முடியாதளவுக்கு மாற்றிவிடுவது அரச கொள்கையாகவே அறிவார்ந்த நடவடிக்கையாகவோ அமையாது.
வெள்ள நீரை தற்போது எதிர்ப்புக் கிளம்பியுள்ள பகுதிக்குள் கொண்டு வருவதற்கு ஏற்கனவே கட்டுமானம் பற்றிய சம்பாசணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, தாழ் நிலமாக உள்ள பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில் தடையில்லை ஆனால் அப் பகுதியில் இருக்கின்ற மக்கள் குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக் கூடிய இடங்களுக்கான கால்வாய் பொறிமுறைகள் நிபுணர் அறிக்கை பெறப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாகவே காணப்பட்டது. இதனை பூர்த்தி செய்வதற்கு நாம் பலதரப்பக்களுடனும் அணுகியுள்ளோம் என்றார்.




