Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

இவ்வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும், தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதன் காரணமாக தான் ஏற்கனவே கூறியதைப்போன்று பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின் பிரகாரம் ஒருவர் கைகளில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வெளிநாட்டு நாணய அளவான 15,000 டொலர்களை 10,000 டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்போர் மற்றும் முறையற்ற வழிகளில் வெளிநாட்டு நாணயப்பரிமாற்றல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் இம்மாதத்திற்கான நாணயச்சபைக்கூட்டம் நேற்று முன்தினம் (18) நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

மந்தகரமான நிலையில் பொருளாதார வளர்ச்சி

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதிவீதத்தை 13.50 சதவீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதிவீதத்தை 14.50 சதவீதமாகவும் அவற்றில் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதற்கு நாணயச்சபையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சந்தை வட்டிவீதங்களில் மேற்கொள்ளப்பட்ட மேல்நோக்கிய திருத்தங்கள், ஏற்கனவே வட்டிவீதங்களில் காணப்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் காரணமாக அமைந்தன. மேலும் பல்வேறு காரணிகளின் தாக்கத்தினால் இவ்வருடம் பொருளாதார வளர்ச்சி வீதமானது மந்தகரமான நிலையில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றுது.

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்

அடுத்ததாக இக்காலப்பகுதியில் இருவகையான சுட்டெண்களின் அடிப்படையிலான கணிப்பீடுகளிலும் பணவீக்கம் உயர்வான மட்டத்தில் காணப்பட்டது. தற்போது 30 சதவீதமாகவுள்ள பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. எனினும் நாணயக்கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சில தீர்மானங்கள் மூலம் எதிர்வருங்காலங்களில் கூட்டுக்கேள்வி மற்றும் பாதமான பணவீக்கத்தாக்கங்கள் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடனுதவி பெறுவதற்கு வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை

வெளிநாட்டுத்துறையைப் பொறுத்தமட்டில் சமநிலையற்ற தன்மையும், மிகவும் சவாலான நிலையும் காணப்படுகின்றது. அதேபோன்று வர்த்தகத்துறை செயலாற்றத்தைப் பொறுத்தமட்டில், முதற்காலாண்டில் இறக்குமதிகளின் அதிகரிப்பின் காரணமாக வர்த்தகப்பற்றாக்குறை உயர்வாகக் காணப்பட்டது. அடுத்ததாக தற்போதைய செலாவணி வீதம் எதிர்வரும் வாரங்களில் தேய்வடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்காலிகக் கடனுதவிகளைப் பெற்றுக்கொள்ளல், வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகியவற்றை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்தோடு அரசாங்கத்தின் இறைக்கொள்கையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.

நாணயச்சபையினால் வட்டிவீதங்கள் உள்ளிட்ட கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டிருப்பதன் காரணமாக கடன்வழங்கல் குறைவடைந்திருப்பதுடன், முன்னரை விடவும் முன்னேற்றகரமான நிலையொன்று காணப்படுகின்றது. அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் வங்கிச்செயற்பாடுகள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகளின் மூலம் வெளிநாட்டுச்சந்தையில் ஓரளவிற்குச் சாதகமான மாற்றம் ஏற்பட்டிருப்பதுடன் கறுப்புச்சந்தை நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் குறைவடைந்திருக்கின்றன.

கைகளில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயம் தொடர்பில் புதிய அறிவிப்பு

அண்மையில் சட்டவிரோதமான முறையில் 50,000 யூரோ மற்றும் 40,000 அமெரிக்கடொலர் வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்போர் மற்றும் முறையற்ற வழிகளில் வெளிநாட்டு நாணயப்பரிமாற்றல்களில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் தொடரும்.

அதேவேளை வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின் பிரகாரம் ஒருவர் கைகளில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வெளிநாட்டு நாணய அளவான 15,000 டொலர்களை 10,000 டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தொகையை 3 மாதகாலத்திற்குமேல் கைகளில் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை மேற்குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்பவர்களுக்க இருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் தமக்கு அந்தப் பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டும். அதுமாத்திரமன்றி இருவாரங்களுக்குள் அவ்வெளிநாட்டு நாணயத்தை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் அதனை ரூபாவாக மாற்றவேண்டும். இதற்கு மாறாகச் செயற்படுவோருக்கு வெளிநாட்டு நாணயமாற்றுச்சட்டத்தின் பிரகாரம் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன், அது அவர்கள் கைகளில் வைத்திருக்கும் தொகையை விடக்கூடிய தொகையாக அமையலாம்.

எனவே வெளிநாட்டு நாணயத்தைக் கைகளில் வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கியில் வைப்புச்செய்வதன் மூலம் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருப்போரின் தேவையைப் பூர்த்திசெய்வதற்குப் பங்களிப்புச்செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மருந்து, எரிவாயு, எரிபொருள் அடுத்தவாரம் கொள்வனவு

ஏற்கனவே குறைக்கப்பட்ட வருமானவரி உள்ளிட்ட வரிகளை மீண்டும் அதிகரிப்பதற்கு அரச திறைசேரியினால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அரச ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை ஈடுசெய்வதற்கு அவசியமான அரசவருமானம் தொடர்ந்தும் குறைவான மட்டத்திலேயே காணப்படும். அதேவேளை உலகவங்கியினால் வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் எதிர்வரும் வாரத்தில் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்யவிருப்பதுடன், அடுத்தவாரம் எரிபொருள் மற்றும் எரிவாயுக் கப்பல்களுக்கான கொடுப்பனவை மேற்கொள்ளவிருப்பதால், தற்போதை நிலை மேலும் சுமுகமடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

பதவி விலகமாட்டேன்

கடந்த வாரம் நாட்டில் பிரதமரோ, அமைச்சரவையோ இருக்கவில்லை. அதேபோன்று நாடளாவிய ரீதியில் வன்முறைச்சம்பவங்களும் பதிவாகியிருந்தன. எனவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால், என்னால் மாத்திரமன்றி எந்தவொரு ஆளுநராலும் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்பதால் நான் பதவி விலகுவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் நாட்டின் அரசியல் நிலைவரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பிரதமரொருவர் நியமிக்கப்பட்டிருப்பதுடன், பாராளுமன்றமும் உரியவாறு இயங்குகின்றது. ஆகவே நான் ஏற்கனவே கூறியதைப்போன்று பதவி விலகவேண்டிய அவசியம் ஏற்படாது. சர்வதேச நாணய நிதியத்துடனான தொழில்நுட்பமட்டப் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் முடிவடையக்கூடிய நிலையில், நிதியமைச்சரொருவரை நியமிக்கவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இருப்பினும் அமைச்சரவை இயங்குவதன் காரணமாக அடுத்துவரும் நாட்களில் நாம் பொருளாதாரம் சார்ந்து முன்னெடுக்கவிருக்கும் செயற்திட்டங்களை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Previous Post

மே 09 வன்முறைகள் – இன்று மேலுமொருவர் உயிரிழப்பு

Next Post

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டும் – கெஹலிய

Next Post
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டும் – கெஹலிய

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டும் - கெஹலிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures