விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார்.
57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 – 0: 6 – 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்டு நேர் செட் வெற்றி இதுவாகும்.
இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக்கின் வியூகங்கள் நிறைந்த அதிசிறந்த ஆற்றல்களால் திக்குமுக்காடிப்போன அனிசிமோவா போட்டி முடிவில் தோல்வியைத் தாங்க முடியாதவராக தேம்பித் தேம்பி அழுதார்.
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நான்கு தடவைகளும் (2020, 2022, 2023, 2024), ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஒரு தடவையும் (2022) சம்பியனான இகா ஸ்வியாடெக், இந்த வருடம் முதல் தடவையாக விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியனானார்.
மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் (Grand Slam Tennis) அவர் வென்றெடுத்த 6ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.
இதன்மூலம் களிமண் தரை, கடின தரை, புற்தரை ஆகிய மூன்று வகையான தரைகளிலும் சம்பியனானவர்கள் என்ற வரலாற்றுச் சாதனை ஏடுகளில் இகா ஸ்வியாடெக் இணைந்துகொண்டார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் வெண்மையின் அடையாளமாக நடத்தப்படுவதால் சகல போட்டியாளர்களும் வெள்ளை ஆடைகளை அணிந்தே விளையாடுவர். அத்துடன் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமான்கள் எனவும் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமாட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது. வீர, வீராங்கனைகளின் பைகள் கூட வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.

