தேசிய மக்கள் சக்தியின் நான்கு அமைச்சர்கள் விமான பயணச்சீட்டு முறைகேடுகளை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த அமைச்சர்கள் நால்வரும் இந்த வெளிநாட்டுப் பயணத்தின்போது விமானத்தில் பொருளாதார வகுப்பு (Economy Class) பயணச்சீட்டுடன் பயணித்து, பின்னர் இரகசியமாக வணிக வகுப்புக்கு (Business Class) மாறிச் சென்று அமர்ந்து கொண்டதாகவும் சுஜீவ சேனசிங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மக்கள் பிரதிநிதிகள்
மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நடந்துகொள்வது மக்கள் நிதியை துஷ்பிரயோகம் செய்வதாகும் எனவும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குச் சிறைத் தண்டனை கூட கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கையை விடுத்தார்.

குறித்த அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என சுட்டிக்காட்டிய இந்தச் செயல் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
