விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘கோவில் சிலையே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காவ்யா தாப்பர் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ரித்திகா சிங், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். எக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் திருமதி ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள், ஒரு பாடல்.. ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘கோவில் சிலையே..’ என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பின்னணி பாடகர் நிவாஸ் பாடியிருக்கிறார். இந்த பாடல் அண்ணன்- தங்கை உறவை மையப்படுத்தி உணர்வு பூர்வமான இசையாக அமைந்திருப்பதால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.