2019ம் ஆண்டைப் பொறுத்தவரையில் ‘விஸ்வாசம்’ #Viswasam என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் மிகவும் செல்வாக்குமிக்க தருணம் ஆக இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது என டுவிட்டர் தளங்களில் நேற்று இரவு முதலே பரபரப்பாக இருந்தது. அதைத் தொடர்ந்து வழக்கம் போல அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சண்டை ஆரம்பித்தது. விஜய் ரசிகர்களும் ‘விஸ்வாசம்’ ஹேஷ்டேக்கிற்குப் போட்டியாக ‘விஷவாசம்’ #Visavasam என்ற அர்த்தத்தில் ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர்.
ஆனால், டுவிட்டர் இந்தியா தரப்பில் ‘விஸ்வாசம்’ முதலிடத்தைப் பிடித்தது இந்த வருடத்தின் இறுதியான பட்டியல் அல்ல. அதற்காக இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்க வேண்டும் என அறிவித்தது. அந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள், கிளைமாக்ஸ் வருவதற்குள் ஆடக் கூடாது என அஜித் ரசிகர்களைக் கிண்டலடித்து டுவீட் செய்து வருகிறார்கள்.
இதனிடையே, விஜய், அஜித், சூர்யா ரசிகர்களுக்கிடையில் டுவிட்டர் இந்தியாவே ஒரு சண்டையை ஆரம்பித்து வைத்துள்ளது. “ஒரு தமிழ்ப் படம் டுவிட்டர் இந்தியா பட்டியலில் வரும் என நினைக்கிறீர்களா?. அப்படியெனில் எந்தப் படம் பற்றி அதிகமாக டுவீட் செய்யப்பட்டிருக்கும் என்பதைச் சொல்லுங்கள் என ஒரு வாக்குப் பதிவை ஆரம்பித்து வைத்துள்ளது.
அதில் ‘விஸ்வாசம், பிகில், என்ஜிகே’ ஆகிய மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 5 மணி நேரத்தில் அதற்கு 97 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன. டுவிட்டரே இப்படி ஒரு சண்டையை ஆரம்பித்து வைக்கலாமா…?.