ஜெனிவாவில் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்தில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பமாகி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கிவரும் கிளைக்கட்டமைப்புக்களில் ஒ;றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழு என்பது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான பிரகடனத்தை ஏற்றுக் கையெழுத்திட்டுள்ள உறுப்புநாடுகளால் அப்பிரகடனம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கான சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கியதொரு கட்டமைப்பாகும். இக்குழுவில் உறுப்புநாடுகளால் முன்மொழியப்படும் 10 உறுப்பினர்கள் உள்ளடங்குவர்.
இக்குழுவின் 29 ஆவது கூட்டத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் கையாளப்படும் முறைமை, அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடு என்பன தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பனவும், சிவில் சமூகத்தின் சார்பில் கொள்கை ஆய்வுக்கான அடையாளம் நிலையம், சர்வதேச மன்னிப்புச்சபை, தமிழ் உலகம் அமைப்பு, கிழக்கு சமூக அபிவிருத்தி அமையம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் தமது அறிக்கைகளை ஏற்கனவே இக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளன.
இக்குழுவில் நாளையும் (26), நாளை மறுதினமும் (27) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று புதன்கிழமை (24) ஜெனிவா பயணமாகினர்.
அதேவேளை வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா சென்றடைந்துள்ளார்.