Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில்

October 25, 2022
in News, Sri Lanka News, கட்டுரைகள், முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக தொகை பணத்தை அவர்கள் கேட்டதாகவும் அவர் முறையிட்டார்.ஆனால் கொழும்பில் குறுந்தூரங்களுக்கு ஆகக் குறைந்தது 120 ரூபாய்களும்,அதற்கு மேற்பட்ட தூரங்களுக்கு மீற்றர் கணக்கின்படி காசு அளவிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.”யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளில் ஏன் மீற்றரைப் பொருத்தக் கூடாது?” என்றும் கேட்டார்.அதுமட்டுமல்ல “பிக்மி” போன்ற நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதும் அதனை முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கம் போன்றன வரவேற்கவில்லை என்ற ஒரு தகவல் தனக்குக் கிடைத்ததாகவும் அவர் சொன்னார்.”பிக்மி போன்ற நிறுவனங்களை யாழ்ப்பாணத்துக்குள் அனுமதித்தால் அது மக்களின் பயணச்சுமையை குறைக்கும் அல்லவா ?” என்றும் கேட்டார்.

அவர் கூறுவதில் உண்மை உண்டு.திருநெல்வேலியில் இருந்து யாழ் நகரப் பகுதிக்கு செல்வதற்கு முன்பு முகம் தெரிந்த ஓட்டக் காரர்கள் 200 ரூபாயும் முகம் தெரியாதவர்கள் 250 ரூபாயும் எடுத்தார்கள்.ஆனால் இப்பொழுது 600 ரூபாய்க்குமேல் கேட்கிறார்கள்.”பெட்ரோல் விலை இறங்கிவிட்டது ஏன் கட்டணத்தைக் குறைக்க கூடாது?”என்று கேட்டால்,”பெட்ரோல் விலை மட்டும்தானே இறங்கியிருக்கிறது? ஏனைய பொருட்களின் விலை இறங்கவில்லையே ?”என்று கூறுகிறார்கள்.

சிறிய ஆனால் கவர்ச்சியான “செமி கொஸ்மோபொலிற்றன்” நகரமாகிய யாழ்ப்பாணம் புலப்பெயர்ச்சி காரணமாகவும் இடப்பெயர்ச்சி காரணமாகவும் அதன் சனப்பொலிவை இழந்துவிட்டாலும்கூட,இப்பொழுதும் அதன் தெருக்களில் ஜனங்கள் நிறைந்து வழிந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகம் உண்டு.ஆனால் முச்சக்கர வண்டிக்காரர்கள் பெட்ரோல் விலை உயரும்பொழுது உயர்த்திய கட்டணத்தை இறக்கத் தயாரில்லை. யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர் ஒருவரும் சொன்னார், அண்மையில் தான் கொழும்புக்குச் சென்ற பொழுது அங்கே ஒரு குறுந்தூர ஓட்டோப் பயணத்தின் பின் எவ்வளவு கட்டணம் என்று கேட்டபொழுது அந்த ஓட்டோச் சாரதி தன்னிடம் 100 ரூபாய் கேட்டார் என்றும், தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும். தலைநகரில் ஓட்டோக் கட்டணங்கள் குறையத் தொடங்கிவிட்டன.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏன் குறையவில்லை?யார் அதைக் குறையவிடாமல் தடுப்பது?பிக்மி போன்ற சேவைகளை யாப்பானத்துக்கு வரவிடாமல் தடுப்பது யார்? ஓட்டோ உரிமையாளர்கள் மீற்றர் பூட்ட மறுப்பது ஏன்? அதைத் தட்டிக் கேட்பது யார்?

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை ஒப்பிட்டுளவில் கட்டுப்படுத்தி வருகிறார். குறிப்பாக எரிபொருள்,எரிவாயு விநியோகம் ஒப்பிட்டுளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.மண்ணெண்ணெய் வினியோகமும் ஒப்பிட்டளவில் சீராகி வருகிறது.அதனால் கடல் படு திரவியங்களின் விலை படிப்படியாக இறங்கி வருகிறது.கோழி இறைச்சியின் விலை அண்மையில் சடுதியாக குறைந்தது.ஆனால் செய்திகளில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமளவுக்கு நடைமுறையில் விலைகளைக் குறைப்பதற்கு வியாபாரிகள் தயாரில்லை.இலங்கை போன்ற நாடுகளில் ஏறிய விலைகள் பொதுவாக இறங்குவது குறைவு என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதை அவர்கள் “கீழ்நோக்கிய இறுக்கம்” என்று வர்ணிக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஒருபுறம் விலைகளைப் படிப்படியாகக் குறைக்கிறார்.இன்னொருபுறம் வரிகளை கூட்டத் தொடங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல,புதிதாக வரிகளையும் விதிக்க தொடங்கியிருக்கிறார். வரிசைகளில் நிற்பதை தடுப்பதென்றால் வரிகளைக் கட்டுங்கள் என்று அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது கூறினார்.மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம் 2019-ல் ராஜபக்சக்கள் செய்த வரிக்குறைப்பே என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.வரியைக் குறைத்தபடியால் நாட்டின் வருமானம் குறைந்ததுதான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறும் அவர் அதனால் புதிய வரிகளை விதிக்க வேண்டியிருக்கிறது என்றும் கூறுகிறார்.

2019இல் கோட்டாபய ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைத்தமைதான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று ரணில் விக்கிரமசிங்க மட்டும் கூறவில்லை.ஏற்கனவே பொருளியல் நிபுணர்கள் அதைக் கூறிவருகிறார்கள். மிகக்குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் “வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்” எனப்படும் நிறுவனம் இதுதொடர்பில் தொடர்ச்சியாகக் கருத்து தெரிவித்து வருகிறது.

வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட் கூறுவது உண்மைதான்.ஆனால் அது ஒரு பகுதி உண்மை மட்டுமே.வரிக்குறைப்பை ராஜபக்சக்கள் ஏழைகளுக்காக செய்யவில்லை.அதையவர்கள் பணக்காரர்களைத் திருப்திப்படுத்தவே செய்தார்கள் என்பது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், வரிக்குறைப்பு மட்டும்தான் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்தது என்பது முழுமையான விளக்கம் அல்ல.வரிக்குறைப்பு பல காரணங்களில் ஒன்று என்பதே சரி.

பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் இனப்பிரச்சினைதான். இனப்பிரச்சினை காரணமாக நாடு அதன் முதலீட்டு தகுதியை இழந்து விட்டது. 2009க்கு பின்னரும் அந்த தகுதியை மீளப் பெற முடியவில்லை. ஏனென்றால் அந்த யுத்த வெற்றி நியாயமான வழிகளில் பெறப்படவில்லை.அது நாட்டின் ஒரு பகுதி மக்களை பூச்சி புழுக்களைப் போல கொன்றொழித்துப் பெறப்பட்ட ஒரு வெற்றி.தமிழ்மக்கள் குற்றம் சாட்டுவதுபோல இனப்படுகொலைமூலம் பெறப்பட்ட ஒரு வெற்றி.எனவே இனப்படுகொலையை அரசியல் வெற்றியாக மாற்ற முடியவில்லை.அதன் விளைவாகத்தான் தமிழர்கள் நீதி கேட்டு உலக சமூகத்தின் கதவுகளைத் தட்டத்தொடங்கினார்கள்.அதுவும் நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை குறைத்துவிட்டது. 2009க்கு பின்னரும் முதலீட்டாளர்கள் நாட்டை நோக்கி வரத் தயங்குகிறார்கள்.எனவே இனப் பிரச்சினைதான் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம்.வரிக் குறைப்பு,ஈஸ்டர் குண்டு வெடிப்பு,பெருந் தொற்று நோய்,உக்ரைன் யுத்தம் போன்றன உப காரணங்கள்தான்.

நாட்டின் பொதுத்துறை ஊதியத்தில் சுமார் 50%படைத்தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும், உலகில் 100 பேர்களுக்கு எத்தனை படைவீரர்கள் என்ற விகிதத்தில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது என்றும் நிஷான் டி மெல்-வெரிற்றே ரிசேர்ச் இன்ஸ்ரிரியூட்டின் பணிப்பாளர்- கூறுகிறார்.இலங்கைத் தீவின் பாதுகாப்பு செலவினம் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரச் செலவினங்கள் இரண்டையும் கூட்டிவரும் தொகையைவிட அதிகமாக இருப்பதும் பொருளாதார சீரழிவுக்கு ஒரு காரணம் என்று நிஷான் கூறுகிறார்.

எனினும், ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்புச் செலவினம் குறைக்கப்படவில்லை.மாறாக ராஜபக்சவின் வரிக்குறைப்பை ஒரு பிரதான காரணமாகக் காட்டி அதன்மூலம் அவர் புதிதாக வரிகளை நியாயப்படுத்த முயல்கிறார்.அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நடுத்தரவர்க்கம்,கீழ் நடுத்தர வர்க்கத்தின் மடியில் அவர் கைவைக்கப் போகின்றார்.ஏனென்றால் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் இயங்க வேண்டியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.எம்.எப்.ஐத் திருப்திப்படுத்தும்.

2019 இல் நடந்த வரிக்குறைப்பு தொடர்பாக நிசான் டி மெல் ஒரு விடயத்தை கடந்த ஓகஸ்ட் மாதம் சுட்டிக்காட்டியிருந்தார்.அந்த வரிக்குறைப்பு உரிய ஆய்வுகளின் பின் முன்னெடுக்கப்படவில்லை.இனிமேலும் வரியை கூட்டும்பொழுது அதற்குரிய ஆய்வுகள் செய்யப்படாவிட்டால் ஏற்கனவே விட்ட தவறை திரும்பவும் விடுவதாக அது அமையும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

புதிய வரிகளின்மூலம் ரணில் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை மேலோட்டமாகத் தணிக்கக்கூடும்.நெருக்கடியின் மூலகாரணத்தை நீக்க அவரால் முடியாது.ஏனென்றால் அவர் தாமரை மொட்டின் கைதியாக காணப்படும் ஒரு ஜனாதிபதி. அடுத்த மார்ச் மாதமளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைத்துவிடும்.அப்பொழுது அவர் தாமரை மொட்டுக்கட்சியில் தங்கியிருப்பதில் இருந்து ஒப்பீட்டளவில் விடுபடலாம். ஆனாலும் தனது சொந்தக் கட்சியை அவர் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அவர் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்தில் நிற்கிறார்.சஜித்தை உடைத்து யானைகளை தன்வசப்படுத்த வேண்டும்.அதற்கு கிடைத்திருக்கும் அரை ஆட்சிக்காலம் போதுமா?எனவே இனப் பிரச்சினையை தீர்ப்பது என்றெல்லாம் அவர் ரிஸ்க் எடுப்பாரா என்பது சந்தேகம்தான்.

முன்னாள் சமாதானத் தூதுவரான எரிச் சூல் ஹெய்ம்மை அவர் நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.சூல் ஹெய்ம் ஜனாதிபதிக்குரிய காலநிலை ஆலோசகர் என்று கூறப்பட்டாலும்,ஐ.எம்.எப்ஐ திருப்திப்படுத்த அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்க்கமுயற்சிப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப திட்டமிடுகிறதா என்ற சந்தேகங்களும் உண்டு.சூல் ஹெய்ம் கொழும்புக்கு வந்த காலகட்டத்தில் தனது ருவிற்றர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்….”மிக விரைவான வழி எப்பொழுதும் நேரான கோடாக இருப்பதில்லை”.அதில் அவர் பிரசுரித்துள்ள சிறு காணொளியின்படி வளைந்த கோடே விரைவானது என்று காட்டப்படுகிறது.அந்த வளைந்த பாதை எது?

ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது ஏறக்குறைய கடைசி ஓவர். மிஞ்சிப் போனால் இன்னுமொரு ஓவர் இருக்கலாம்.அவருக்கு வயதாகிவிட்டது.தன்னுடைய கடைசிக் காலத்தில் முழு நாட்டையும் பலப்படுத்துவதா?அல்லது தனது சொந்தக் கட்சியான யு.என்.பியை பலப்படுத்துவதா ? என்று அவர் முடிவெடுக்க வேண்டும்.அவர் பதவியேற்ற அறையின் பின்னணிச் சுவரில் மூன்று ஒளிப்படங்களைத் தொங்கவிட்டிருந்தார்.டி.எஸ்.சேனநாயக, டட்லி சேனநாயக, ஜெயவர்த்தன ஆகிய மூவரின் ஒளிபடங்களுமே அவை.இதன்மூலம் அவர் என்ன கூற வருகிறார்?அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளில் அவர் பெருமளவுக்கு ஜெயவர்த்தனாவை பின்பற்றுவது போல தோன்றுகிறார்.

எனவே அவருக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு.முதலாவது தெரிவு அன்ரன் பாலசிங்கத்தை தீர்க்கதரிசி என்று நிரூபிப்பது.இரண்டாவது தெரிவு தான் ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபிப்பது.அன்ரன் பாலசிங்கத்தை தீர்க்கதரிசியாக நிரூபிப்பது என்றால் ஜெயவர்த்தனவின் வழியில் தொடர்ந்து போக வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும்.அல்லது,தன்னுடைய கடைசி ஓவரை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து, நாட்டின் சமாதானத்துக்கு அர்ப்பணித்து உழைப்பாராக இருந்தால்,அதற்காக சிங்கள பௌத்த பெருந்தேசியவாதக் கட்டமைப்பை எதிர்த்து ரிஸ்க் எடுப்பாராக இருந்தால் நாடு அவரை ஒரு தீர்க்கதரிசி என்று போற்றும். இல்லையென்றால் நரி என்று தூற்றும்

Previous Post

போதைப்பொருள் விழிப்புணர்வு | யாருக்குத் தேவை?

Next Post

யாழில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

Next Post
யாழில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

யாழில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures