தமிழ் சினிமாவில் தற்போதைய நம்பர் 1 நடிகை நயன்தாரா தான். கடந்த சில வருடங்களாகவே அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து அவரை முன்னணியிலேயே வைத்திருக்கிறது. 2018ல் நயன்தாரா நடித்து வெளிவந்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
2019ல் அவருடைய முதல் வெளியீடாக பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து இந்த வருடத்தில் வரிசையாக நயன்தாராவின் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர உள்ளன. மார்ச் கடைசியில் ஐரா படம் வெளிவருகிறது. அதற்கடுத்து கொலையுதிர் காலம் படம் வெளிவர உள்ளது. மே மாதத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் வரும். தீபாவளிக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் படம் வெளிவரலாம்.
அவற்றோடு தெலுங்கில் சை ரா படமும், மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா படமும் வெளியாகும். இவை தவிர நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க மேலும் சில படங்களுக்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதனால், அடுத்த வருடத்திலும் நயன்தாராவே நம்பர் 1 நடிகையாகத் தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.