பிரான்ஸிலுள்ள பாடசாலையொன்றின் வகுப்பறையில் மாணவனொருவன் கத்தியால் குத்தியதால் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தென்மேற்கு பிரான்ஸிலுள்ள செயின்ற் ஜீன் டே லுஸ் நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது என பிராந்திய வழக்குத்தொடுநர் தெரிவித்துள்ளார்.
52 வயதான அக்னிஸ் லாசாலே என்பவரே உயிரிழந்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
16 வயதான மாணவன், அமைதியாக காணப்பட்டான் எனவும், ஆனால் அவன் ஆசிரியையை நெருங்கி, எதுவும் கூறாமல் அவரின் நெஞ்சில் கத்தியால் குத்தினான் என மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆசிரியைக்கும் மாணவனுக்கும் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை எனவும் அம்மாணவி கூறியுள்ளார்.
ஆசிரியைக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என அரச வழக்குத் தொடுனர் ஜெரோம் போரியர் கூறியுள்ளார்.
மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் குறித்து தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் கூறியுள்ளார்.