பிக்பாஸ் புகழ் ஆரவ், ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ராஜபீமா. இது கும்கி பாணியில் யானையை மையமாக கொண்ட படம். ஆரவ், யானை பாகனாக நடிக்கிறார். அவருடன் ஆஷிமா நர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஓவியா சிறப்பு தோற்றத்தில் நடித்து, ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். எஸ்.மோகன் தயாரித்துள்ளார், புதுமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்குகிறார்.
பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து ஆகிய இடங்களில் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்புகள் முடிவுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் நரேஷ் சம்பத் கூறியதாவது:
ராஜபீமா, மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள உறவையும், முரணையும் பேசுகிற படம். இது விலங்குகளை வைத்து அவற்றால் செய்ய முடியாத விஷயங்களை செய்ய வைத்து காமெடி செய்யும் படமல்ல, சீரியசாக பேசும் படம். அடர்ந்த காடுகள் தான் இதன் பெரும்பான்மையான கதை களம்.
அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது.
அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். போஸ்ட் புரொடக்சன் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க உள்ளோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

