இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் ஆகியோர் நியூஸிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் வகையில் பயிற்சி பெறுவதற்கு ரதல்லை மைதானம் உகந்த இடம் என தெரிவித்தனர்.
தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுநர் தர்ஷன கமகே மற்றும் களத்தடுப்பு பயிற்றுநர் மனோஜ் அபேவிக்ரம ஆகியோரும் புதிய பயிற்சி மைதானம் குறித்து தமது திருப்தியை வெளியிட்டனர்.
நியூஸிலாந்தின் சுவாத்தியத்திற்கு ஒப்பான ரதல்லையில் குறிப்பாக கடல்மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாகும். அத்துடன் பந்து எகிரிப்பாய்வதற்கும் திசை திரும்புவதற்கும் ஏதுவனான ஆடுகளமாக இருப்பதால் நியூஸிலாந்தின் தன்மைக்கேற்ப தம்மை தயார்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியதாக வீரர்கள் கூறினர்.
ரதல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை அணியினர் ஒரு வார கால பயிற்சியை முடித்துக் கொண்டு கொழும்புக்கு வெள்ளிக்கிழமை (25) திரும்பவுள்ளனர்.