நடிகர் தமன் ஆகாஷ் கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு பெருகி வருவதால்.. மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர். இந்நிகழ்வில் படத்தின் நாயகனான நடிகர் தமன் ஆகாஷ் பேசுகையில், ” எமது முந்தைய திரைப்படமான ‘ஒரு நொடி’ படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அதே குழுவினருடன் இணைந்து ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை உருவாக்கி வெளியிட்டோம். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு எங்களை வியக்க வைத்தது.
‘ஒரு நொடி’ படத்தின் முதலீடு இந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இரண்டு நாள் வசூலில் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் , இப்படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், இந்தப் படத்தை தயாரித்து சந்தைப்படுத்திய அமோகம் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் எம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.