யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீடு இருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வடக்கில் கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தைப் போலவே, அரச திணைக்களங்களில் ஆளுந்தரப்பின் அதிகாரத் தலையீடுகள் தொடர்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றது போல நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற ஒருவர் அதிகமாகத் தலையீடு செய்யவதாகக் கூறப்படுகிறது.
எதிர்ப்புப் போராட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆளணி அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதில் பெரும் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அதனைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தது. அதன் பின்னணியில், பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்குக் கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், வெற்றிடங்களை நிரப்பும் போது, தனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தன்னுடைய அனுமதியுடனுமே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

