வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன என, தென்னை பயிர் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
“இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025” என்ற தொனிப்பொருளில், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரி கச்சாயில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலேயே இந்தச் செயற்றிட்டம் யாழ். மாவட்டத்தில்தான் ஆரம்பிக்கப்படுகின்றது.
தற்போது நாட்டில் வருடத்திற்கு 3,000 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யும் இலக்கு இருந்தாலும், வெள்ளை ஈ உள்ளிட்ட நோய்கள், விலங்குகளின் சேதம் போன்ற காரணங்களால் அதன் உற்பத்தி குறைவடைந்துள்ளது.
2030ஆம் ஆண்டு வரையில் 4,200 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யும் நோக்குடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்காக 150 இயந்திரங்கள் மற்றும் 150 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் ஒரு இயந்திரத்தையும் இயக்க குறைந்தது நான்கு நபர்கள் தேவைப்படுவதால், பொதுமக்களின் நேரடி ஒத்துழைப்பு முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.
வடமாகாண ஆளுநர் நிகழ்வில் உரையாற்றும்போது,
கடந்த சில ஆண்டுகளில் வெள்ளை ஈ தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும், தற்போது அது மீண்டும் அதிகரித்துள்ளதையும், பல மரங்களில் தேங்காய் உற்பத்தி நின்றுவிட்டதையும் குறிப்பிட்டார்.
வீட்டு தேவைக்கு அப்பால் தேங்காயை விற்பனை செய்து சிறிய வருமானம் ஈட்டும் குடும்பங்களும் இத்தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், வடக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்த “தென்னை முக்கோண வலயம்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் ஊடாக, வெள்ளை ஈ கட்டுப்பாடுகள் வெற்றியடையுமாயின், எதிர்காலத்தில் தென்னை உற்பத்தியில் பெருமளவு முன்னேற்றம் காணப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனுடன், உதவிப் பொது முகாமையாளர் ரி. வைகுந்தன், இந்த திட்டம் வடமாகாண ஆளுநரின் தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து உருவாகியதாகவும், மக்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.









