தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விதார்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மருதம் ‘ எனும் திரைப்படம் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் உரக்க பேசும் படைப்பாக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மருதம் எனும் திரைப்படத்தில் விதார்த், ரக்ஷணா, அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, ‘தினந்தோறும்’ நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அறுவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. வெங்கடேசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”விவசாயியின் வாழ்வியல் மற்றும் விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக’ மருதம்’ உருவாகியுள்ளது. சமூகத்தினரால் ஏமாற்றத்திற்குள்ளான ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பதை பரபரப்பான சம்பவங்களுடன் விவரித்திருக்கிறோம்” என்றார்.