நகைச்சுவை நடிகரான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ராபின்ஹூட் ‘எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான ஹெச். வினோத் வெளியிட்டு , படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராபின்ஹூட்’ எனும் திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர் என் ஆர் மனோகர் ,கே பி வை சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இக்பால் அஸ்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசையமைத்திருக்கிறார். பீரியாடிக் கொமடி ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ்- டியூப்லைட் புரொடக்ஷன்ஸ் – லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கடந்த தசாப்தங்களில் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் தொடர்பான மோசடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால்.. அவல நகைச்சுவையுடன் கூடிய படைப்பாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
