ராகவா லாரன்ஸ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் படம் முனி 4ம் பாகம். காஞ்சனா 3 என்ற இன்னொரு பெயரும் இதற்கு உண்டு. தற்போது படத்தின் பணிகள் முடிந்து இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. இதே சாயலில் உருவாகி வரும் மற்றொரு படம் சண்டிமுனி.
இதில் நட்டி முனியாக நடிக்கிறார். மனிஷா யாதவ், யோகிபாபு, வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி உள்பட பலர் நடிக்கிறார்கள். செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார், ரிஷால் சாய் இசை அமைக்கிறார். 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. அடுத்த மாதம் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குன் மில்கா குமார் கூறியதாவது:
எல்லோரையும் போல சராசரி மனிதனாக வாழ்கிறார் நட்டி. மனீஷாவை காதலித்து திருமணம் செய்ய இருக்கிற நிலையில் அவருக்குள் பல மாற்றங்கள், சில பிரச்சினைகள் அது என்ன அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை.
அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட அவர் குடும்பம் நடத்தும் குல தெய்வ வழிபாட்டு பாடல் காட்சியை வளசரவாக்கம் முனீஸ்வரன் கோவிலை பிரமாண்ட செட் போட்டு படமாக்கினோம். “பெரும் கோபக்காரா, எங்க சண்டி வீரா, தொல்லை தீர்க்க வாடா ஆவி ஓட்ட வாடா” என்ற இந்த பாடல் காட்சியில் 40 நடன கலைஞர்கள் 300 துணை நடிகர் நடிகைகள் பங்கேற்க, அசோக்ராஜா நடன அமைப்பில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும் ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது. என்றார்.

