மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண செயற்பாடுகள் 13ஆவது திருத்தத்துக்கு உட்பட்ட வகையில் வடக்கு மாகாண சபையின் அனுமதியைப் பெற்று அல்லது அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்படுத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்.
முல்லைத்தீவில் திட்டமிட்டு தமிழர் நிலங்களை அபகரிக்கும் அரசின் செயற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று முல்லைத்தீவுக்குச் சென்றது. அத்துமீறிய நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனும் சென்றிருந்தார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:-
வடக்கில் கொக்கிளாய் உடன் சேர்ந்த பிரதேசங்கள் மணலாறு என்று எங்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது வெலிஓயா என்ற பெயரில் சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமாக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றுமுழுதாக சிங்கள மக்களை குடியேற்று வதற்காக அமைக்கப்பட்ட பிரதேசமாகவே உள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உள்ளது. இந்த அதிகார சபையைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. நாம் இதைப் பற்றிப் பேசினால் பரிசீலிக்கலாம் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்களின் நிகழ்ச்சி நிரல் மாறவில்லை. தற்போது கல்யாணபுர, ஜனகபுர எனப் பல புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தக் கிராமத்தில் வாழும் பெரும்பான்மையினத்தவர்கள் கடும் குற்றங்கள் புரிந்த வர்கள். அவர்களை சிறைகளில் இருந்து கொண்டுவந்துதான் ஆரம்பத்தில் குடியேற்றினார்கள். அரசு ஒரு பிழையான நடவடிக்கைகயை மேற்கொண்டுள்ளது.
முன்னர் அரச தலைவராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் காணி உறுதுிகளை மாற்றிச் சிங்கள மக்களுக்கு உறுதிகளை வழங்கினார். தமிழர்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றன.
13ஆவது திருத்தச் சட்டத்தையும் மீறி மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தமிழர்களின் காணிகளை அபகரிப்பது ஏற்கமுடியாத செயல்.
தமிழர்கள் திரண்டு போராட வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆயுதபலம் காரணமாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கைகள் தமிழர் வாழ்விடங்களில் நடக்கவில்லை. தமிழர்களின் ஆயுதபலம் ஒடுக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாம் ஓர் பலமற்ற நிலையிலேயே அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டியுள்ளது– என்றார்.

