போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர்.ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா? போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள் என்றால் அது ஜே.வி.பி என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பல்வேறு விதமான போராட்டங்களும்,கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், கடந்த மாதம் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர்களுடன் சந்திப்பும்,13 ஆம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பின்னர் ஒரு மாத காலம் இடை நிறுத்தப்பட்டிருந்த பணிகள் அதற்கு பின்னர் மாவட்டத்தில் இயங்குகின்ற அமைப்புக்களுடனான கலந்துரையாடல், பாதிக்கப்பட்ட தரப்புக்களுடன் 5 இடங்களில் கலந்துரையாடல் என இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து வருகை தந்த விசேட குழுக்களிடம் அமைப்புக்கள் ஊடாக கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.இவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டவர்கள், நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது போல் ஜனாதிபதியினுடைய செயலாளர் கடந்த 22 ஆம் திகதி மின்சக்தி அமைச்சிற்கு கடிதம் எழுதியுள்ளார் 14 காற்றாலை களையும் அதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு.
அன்றைய தினமே மின் சக்தி அமைச்சின் செயலாளர் மன்னார் மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.ஆகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு போல் மக்கள் மன்றங்களின் விவகாரங்களை அரசு கையாள நினைப்பது சர்வ அதிகாரத்தின் அதி உச்சமாக நாங்கள் பார்க்கின்றோம்.ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாதங்களைக் கேட்டு உணர்ந்தவர்கள் அந்த மக்களுடன் மீண்டும் கலந்தரையாடியே தீர்மானத்திற்கு அவர்கள் வந்திருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதை சொல்லுங்கள்.நாங்கள் நினைப்பதை தான் செய்வோம் என்றால் அரசு முற்று முழுதாக சர்வாதிகாரமாக தான் செயல் படுகிறதா?மக்களுடைய அடிப்படை கோட்பாட்டில் இருந்து விலகி கடந்த கால அரசாங்கங்கள் மக்களுக்கு எதிராக சமூகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்ததோ , அதே விடையத்தை அனுரவின் அரசும் முன்னெடுக்கின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போராடுகின்ற மக்களை தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்ற மக்களோடு,எந்த விதமான உரையாடலும் மேற்கொள்ளாது அவர்கள் தாங்கள் நினைத்தது போல் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதனடிப்படையில் நேற்று சனிக்கிழமை (27) இரவு காற்றாலைக்கான உதிரிபாகங்களை மன்னாருக்கு கொண்டு வந்துள்ளனர்.இதன் போது அதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிலேச்ச தனமானது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளது.ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை கேட்டு போராடுவது தவறா?போராட்டத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்தவர்கள் போராட்டத்திற்கு ஒரு கட்சி என்றால் அது ஜே.வி.பி தான்.அந்த நிலையில் இருந்து கொண்டு ஆட்சி சித்தாந்தத்தை ஏற்படுத்திய கட்சி இன்று அதே போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது என்பது உண்மையில் அவர்களின் மனநிலை என்ன?
யுத்த வெற்றி வாத மனோ நிலையில் ராஜபக்ஸக்கள் எவ்வாறு செயலாற்றினர் களோ அந்த ராஜ பக்ஸக்களை யுத்த வெற்றி வாத மன நிலைக்கு இட்டுச் சென்ற ஜே.வி.பி இன்றைய ஜனாதிபதியும் மிக முக்கியமானவர்.ஆகவே அதே மனநிலையில் தான் இன்றும் அவர்கள் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள் என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது.
உங்களுடைய கட்சிக்கு கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் அதிக அளவான மக்கள் வாக்களித்துள்ளனர்.அந்த மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் சற்று கூட புரிந்து கொள்ளாத இந்த அரசு தான்தோன்றித்தனமாக ஜனநாயக விரோத செயல்பாட்டில் ஈடுபடுகின்றது.நாட்டிற்கு ஜனாதிபதி வந்ததன் பின்னர் மக்களுடன் உரையாடி அவர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் எவ்வாறு நடை முறைப்படுத்த போகின்றீர்கள்?.நடை முறைப் படுத்துகின்ற போது எழுகின்ற சவால்களுக்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்?.
ஏற்கனவே 30 காற்றாலைகள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,பிரதேசங்களுக்கும் என்ன தீர்வு வைத்துள்ளீர்கள்?.இவற்றை எல்லாம் கலந்துரையாடி தான் அரசு அடுத்த கட்ட நகர்வுக்கு போக வேண்டுமே தவிர நாங்கள் நினைத்ததை தான் செய்வோம் என்றால் இது ஜனநாயக அரசும் இல்லை.
நாட்டின் கோட்பாட்டு தத்துவமும் இல்லை.மன்னார் மக்கள் ஏன் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று அரசு தரப்பு இன்னும் புரிந்து கொள்ளவில்லை.தீவுப் பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என்பதையே மக்கள் தெரிவிக்கின்றனர்.மக்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிரானவர்கள் இல்லை.
மேலும் கடந்த அரசாங்கம் தான் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என தற்போதைய அரசு கூறுகிறது.ஆனால் கடந்த 22-02-2025 அன்று கேலீஸ் நிறுவனத்திற்கு 10 காற்றாலைகள் அமைக்க மின் சக்தி அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று தற்போதைய அரசு கூறிவிட முடியாது.
எனவே அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.மக்களின் ஜனநாயக எழுச்சியை எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கை சந்தித்தது.
எனவே காற்றாலைகளை நிறுவுவதற்கு முன்னர் அரசு எங்களுடன் கலந்துரையாடல் களுக்கு வர வேண்டும்.வர தவறும் பட்சத்தில் மன்னார் மக்கள் தொடர்ந்தும் இவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கடை பிடிப்பார்கள்.அதற்கான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது.மன்னார் மக்கள் இத்திட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.தொடர்ந்தும் மக்கள் இவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கடை பிடிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மீனவ அமைப்பின் பிரதிநிதி என்.எம்.ஆலம்,சமூக செயற்பாட்டாளர் திருமதி ரெபேக்கா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.