மண்ணெண்ணெய் , பெற்றோலைக் கோரி கொழும்பில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

நாட்டில் எரிபொருளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், மக்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் வரிசையில் காத்திருக்கின்றனர்.

சில பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகிலும், சமையல் எரிவாயு விற்பனை நிலைய வளாகங்களிலும் இரவிரவாக மக்கள் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு இன்று கொழும்பு – ஒருகொடாவத்தை பிரதேசத்திலுள்ள லாஃப் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண்ணெய்ணெய் மற்றும் பெற்றோல் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பல மணித்தியாலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் , அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாமையால் வரிசையில் காத்திருந்த மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

May be an image of 1 person, standing, crowd and road

தமக்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் என்பவற்றை வழங்கும் வரையில் அவ்வழியூடான போக்குவரத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என்று மக்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் காரணமாக அந்த வழியூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.

May be an image of 1 person, standing, road and crowd

இதனால் போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு விரைந்து , போக்குவரத்திற்கு வழி விடுமாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.

எவ்வாறிருப்பினும் தமக்கான மண்ணெய்ணெய் மற்றும் பெற்றோல் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே போக்குவரத்திற்கு வழிவிடுவோம் என்று மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்கும் , பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதோடு , இரு தரப்பினரும் தாக்கிக் கொள்ளவும் முற்பட்டனர்.

எனினும் பின்னர் வாக்குவாதம் தீவிரமடையாமல் இரு தரப்பினரும் சுமுகமாகக் கலந்துரையாடினர்.

இதன் போது கடந்த ஓரிரு தினங்களாகவே வரிசையில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கு , இலக்கத்தினை வழங்கி , பிறிதொரு நாளில் எரிபொருளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரிசையில் காத்திருந்த மக்கள் ஊடகங்களிடம் தமது விசனத்தை வெளிப்படுத்துகையில் ,

‘நான் உழைத்து தான் குடும்ப பொருளாதார சுமையை சுமக்கின்றேன். இன்று மண்ணெய்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு நாள் விடுமுறையில் வந்து வரிசையில் காத்திருக்கின்றேன். ஆனால் மண்ணெண்ணெய் இல்லை என்று கூறுகின்றனர்.’ , ‘வாக்களித்த நாம் இறுதியாக வீதியில் அநாதரவாகியுள்ளோம்’ என்று குறிப்பிட்டனர்.

மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக வைத்திருந்த கலன்களுடன் அவ்வீதியில் பயணித்த வாகனங்களுக்கு அருகில் சென்று அவற்றை அங்கிருந்து செல்ல விடாமல் , கடும் கோஷங்களை எழுப்பி சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டதோடு , வாகனங்களில் சென்ற பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News