மெல்பர்னில் மூன்று வருடங்களுக்கு முன்னர் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிகொண்டு சம்பியனான அவுஸ்திரேலியா இம்முறை அதே அணியை முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.
தென் ஆபிரிக்காவின் கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாடரங்கில் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு அணிகளும் எட்டாவது மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் 1ஆம் குழுவில் 4 போட்டிகளிலும் வெற்றியீட்டிய நடப்பு சம்பியனும் பலசாலியுமான அவுஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக தென்படுகிறது.
அதேவேளை, 2ஆம் குழுவில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த போதிலும் மற்றைய 3 போட்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறிய இந்தியா, இன்றைய போட்டியில் தலைகீழ் முடிவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இரண்டு அணிகளிலும் இடம்பெறும் ஒவ்வொரு வீராங்கனையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் அனைவருமே சிறந்த வீராங்கனைகளாகவே காணப்படுகின்றனர்.
ஆனால், இந்த இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நிலைமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அழுத்தங்களை எதிர்கொள்ளக்கூடிய சாமர்த்தியமும் அவுஸ்திரேலியாவிடம் நிறையவே இருக்கிறது. இந்திய வீராங்கனைகளோ அழுத்தங்களை எதிர்கொள்ளும்போது சிறு தடுமாற்றத்துக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இந்திய வீராங்கனைகள் புத்தி சாதுரியத்துடனும் துணிச்சலுடனும் விளையாடினால் அவர்களது அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ரிச்சா கோஷ் கருத்து
அவுஸ்திரேலிய அணி பலசாலியானபோதிலும் தங்களால் அவர்களை வெற்றிகொள்ள முடியும் என ஊடக சந்திப்பில் இந்திய விக்கெட் காப்பாளர் ரிச்சா கோஷ் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக அவுஸ்திரேலியா திகழ்கின்ற நிலையில் அவ்வணியை இந்தியாவால் வெற்றிகொள்ள முடியும் என எண்ணுகிறீர்களா என ரிச்சா கொஷிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘எங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்த முடியும். எங்களால் வெற்றிகொள்ள முடியாது என்பதல்ல. ஏனேனில் கடைசியாக எமது சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் நாங்கள் வெற்றிகொண்டோம். அதற்கு முன்னரும் வெற்றிபெற்றுள்ளோம். அவர்கள் பலசாலிகள்தான். ஆனால், அவர்களை எங்களால் வெற்றிகொள்ள முடியம்’ என பதிலளித்தார்.
விக்கெட் காப்பாளர் என்ற வகையில் மைதானத்தின் சகல கோணங்களையும் பாரக்கக்கூடிய உங்களால் எதிரணிகளின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்திருப்பீர்கள். அப்படியானால் அவுஸ்திரேலியாவின் பலவீனத்தையும் அறிந்துள்ளீர்களா? அவர்களைப் பாதிக்கச் செய்யும் திட்டங்களை வகுத்துள்ளீர்களா? என ரிச்சாவிடம் கேட்டபோது,
‘ஆம். அவர்களது பலவீனங்களை அறிந்து அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம். அதெல்லாம் இரகசியம். அதனை நாங்கள் வெளியிட்டால் அவர்கள் ஜாக்கிரதையாகி விடுவார்கள். எனவே அவர்களுக்கு தகவல் கிடைக்கக்கூடிய வகையில் நான் எதனையும் இப்போது வெளியிடமாட்டேன்’ என மிகவும் அனுபவசாலி போல் ரிச்சா கோஷ் சாதுரியமாக பதிலளித்தார்.
எந்தவொரு வெற்றி இலக்கையும் விரட்டிப் பிடிக்கும் ஆற்றல் அவுஸ்திரேலியாவிடம் இருக்கிறது. எனவே, நாணய சுழற்சியில் வெற்றிபெற்றால் இந்தியா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு,
‘அவர்களது பலம்வாய்ந்த துடுப்பாட்டம் நீண்டு செல்கிறது. எமது அணியிலும் அப்படித்தான். ஆனால், நாணய சுழற்சி யார் கைகளிலும் இல்லை. எது நேர்ந்தாலும் அதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். என்ன செய்யவேண்டும் என நாங்கள் எண்ணவில்லை. எனினும் நாங்கள் திட்டத்துடன் தயாராக உள்ளோம். நாங்கள் முதலில் துடுப்பெடுத்தாடினால் கணிசமான ஓட்டங்களைப் பெறவேண்டும். களத்தடுப்பில் ஈடுபட்டால் அவுஸ்திரேலியாவை குறைந்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.
மெக் லெனிங் (ஆஸி. அணித் தலைவர்)
அண்மைக் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளதாகக் குறப்பிட்ட மெக் லெனிங், உண்மையைக் கூறுவதென்றால், இரண்டு அணியினரும் ஒன்றையொன்று நன்கு அறிந்துள்ளோம். இந்தியா ஒரு திறமையான அணி. எனவே மிகத் திறமையாக விளையாடி வெற்றிபெறுவதே எமது நோக்கம்’ என்றார்.
அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் தங்களது குழாத்தில் இடம்பெறும் 15 வீராங்கனைகளும் போட்டிக்கு தயாராக இருக்கிறார்களா என அவரிடம் கேட்டதற்கு,
‘ஆம். அப் போட்டிக்காக எமது முழு குழாமும் தயாராக இருக்கிறது. அலிசா ஹீலி பூரண ஆரோக்கியம் பெற்று விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டுள்ளார். அது எமக்கு மிகப் பெரிய அனுகூலமாகும். அவர் இம்முறை மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியுள்ளார். அவர் எமது அணிக்கு பிரதான பங்களிப்பை வழங்குவார் என்பது நல்ல விடயாமாகும். ஆனால் எமது இறுதி பதினொருவரை தெரிவு செய்வதில் சிக்கல் நிலவுகிறது. நாங்கள் நிலைமைகளை நன்கு ஆராய்ந்த பின்னர் இறுதி அணியைத் தீர்மானிப்போம். எல்லோரும் தயாராக இருப்பது நல்ல விடயமாகும்’ என பதிலளித்தார்.
உலகக் கிண்ண இறுதி ஆட்டமாக இருக்கட்டும் பொதுநலவாய நொக் அவுட் போட்டியாக இருக்கட்டும், இரண்டிலும் இந்தியாவை அவுஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது. இது உளரீதியான அனுகூலத்தை உங்களுக்கு கொடுக்குமா என லெனிங்கிடம் கேட்டதற்கு,
‘நான் அப்படி நினைக்கவில்லை. நாளைய போட்டியில் இரண்டு அணியினரும் ஒரே மட்டத்திலிருந்துதான் ஆரம்பிக்க உள்ளோம். கடந்த காலங்களில் நடந்தவை மாற்றத்தை ஏற்படுத்தாது. நாங்கள் களத்தில் இறங்கி எமது சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதுடன் விரும்பும் வகையில் விளையாடவேண்டும். இந்தியாவிலும் அப்படித்தான் செய்ய விரும்புகிறோம். இரண்டு உலகத் தரம்வாய்ந்த அணிகளுக்கு இடையிலான இப் போட்டி ஒரு வியத்தகு போட்டியாக அமையும். எனவே, குறிப்பிட்ட நாளில் எமது அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவதிலேயே எல்லாம் தங்கியிருக்கிறது’ என்றார்.
அணிகள்
இந்தியா: ஷஃபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா, ஹாமன்ப்ரீத் கோர் (தலைவி), ரிச்சா கொஷ், ஜெமிமா ரொட்றிகஸ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர், தேவிகா வைத்யா, ஷிக்கா பாண்டி, ராஜேஷ்வரி கயக்வாட், ரேனுகா சிங், யஸ்டிக்கா பாட்டியா, ராதா யாதவ் (உடற்தகுதியைப் பொறுத்து), அஞ்சலி சர்வாணி, ஹார்லீன் டியோல்.
அவுஸ்திரேலியா: அலிசா ஹீலி, பெத் மூனி, எலிஸ் பெரி, மெக் லெனிங் (தலைவி), ஏஷ்லி கார்ட்னர், தஹ்லியா மெக்ரா, க்றேஸ் ஹெரிஸ், ஜோர்ஜியா வெயார்ஹாம், அனாபெல் சதர்லண்ட், அலனா கிங், மெகான் ஷூட், டார்சி ப்றவுண், கிம் கார்த், ஹீதர் க்றஹாம், ஜெஸ் ஜொனாசன்.