தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
‘ஈட்டி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத விஷாலின் 35 வது திரைப்படத்தில் விஷால், துஷாரா விஜயன், தம்பி ராமையா, அர்ஜெய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தயாரிக்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 ஆவது திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இயக்குநர் ரவி அரசு – விஷால் – சூப்பர் குட் பிலிம்ஸ் – ஜீவி பிரகாஷ் குமார் – கூட்டணியில் தயாராகும் ‘விஷால் 35’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.