சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான, புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த, ‘ஒரு அடார் லவ்’ படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப்படத்திற்கு சம்பந்தமே இல்லாதவகையில் அவ்வளவு சோகமான க்ளைமாக்ஸ் எதற்கு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது படத்தின் இயக்குனர் ஓமர் லுலுவையும் பட தயாரிப்பு நிறுவனத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தவிர படத்திற்கு கடந்த ஒரு வருடமாக கிடைத்த இலவச பப்ளிசிட்டி அனைத்தும் வீணாகிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கும் ஓமர் லுலு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் மீண்டும் வேறுவிதமாக எடுத்துள்ளார். க்ளைமாக்சிற்கு முந்தைய பத்து நிமிடங்களுக்கு முன் இந்த புது க்ளைமாக்ஸ் இணைக்கப்படுமாம்.
அதுமட்டுமல்ல இதுபோக மொத்தப்படத்திலும் சுமார் பத்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டு படம் ட்ரிம் செய்யப்படுகிறதாம். வரும் புதன்கிழமையில் இருந்து இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட ‘ஒரு அடார் லவ்’ படம் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட இருப்பதாக இயக்குனர் ஓமர் லுலு கூறியுள்ளார்.