பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஜெடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி
நடிகர்கள்: ஜீ. வி. பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, முத்துக்குமார், ரமேஷ் திலக் , ரெடின் கிங்ஸ்லி, ஹரி பிரியா மற்றும் பலர்.
இயக்கம் : மு. மாறன்
மதிப்பீடு : 2.5/5
தொடர்ந்து சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குநர் மு .மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரில்லர் படம் என்பதாலும், ஜீ. வி. பிரகாஷ் குமார் நடித்திருப்பதாலும், படத்தை பற்றி வெளியான குறு காணொலிகள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாலும்… பட மாளிகைக்கு சென்றனர். அவர்களுக்கு படக்குழுவினர் – திரில்லிங்கான படமாளிகை அனுபவத்தை அளித்தார்களா ? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மருந்துகளை விற்பனை செய்யும் நிலையத்திற்கு நான்கு சக்கர வாகனம் மூலம் மருத்துவ பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் மணி( ஜீ.வி. பிரகாஷ் குமார்) , மருந்தகம் ஒன்றில் ஊழியராக பணியாற்றும் ரேகா ( தேஜு அஸ்வினி) என்ற பெண்மீது காதல் கொள்கிறார். இவர்களின் காதல் வாழ்க்கையில் எல்லை மீறியதால்… வழக்கமாக வரும் சிக்கல் ஒன்று ஏற்படுகிறது. இது தொடர்பாக அவருக்கு ஆறுதல் சொல்லும் தருணத்தில்.. வீதி ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த மணியின் மருந்து விநியோகம் செய்யும் வாகனம் திருடு போகிறது. இது தொடர்பாக மணி தனது உரிமையாளரான சிதம்பரத்திற்கு ( முத்துக்குமார் ) போன் மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவிக்கும் போது, அவர் அதிர்ச்சி அடைகிறார்.
அந்த வாகனத்தில் தான் இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருளை சிதம்பரம் மணிக்கு தெரியாமல் கடத்துகிறார். 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் காணாமல் போனதால்.. மணி மீது ஆத்திரம் கொள்ளும் சிதம்பரம் – மணியின் காதலியான ரேகாவை கடத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார். போதைப்பொருள் அல்லது அதற்கு ஈடான பணம்.. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை தந்து விட்டு உன் காதலியை அழைத்துச் செல் என சிதம்பரம் மிரட்டுகிறார்.
செய்வதை அறியாது தவிக்கும் மணி, தனது நண்பரை அழைத்துக் கொண்டு காவல்துறையிடம் புகார் கொடுக்கிறார். இந்த நிலையில் பெரும் தன வந்தரான அசோக்( ஸ்ரீகாந்த்) கின் ஒரே மகள் அனு மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்லும்போது திடீரென கடத்தப்படுகிறார். குழந்தை கடத்தப்பட்டதன் பின்னணி குறித்து அக்குழந்தையின் பெற்றோர்களான அசோக் – அர்ச்சனா ( பிந்து மாதவி) ஆகிய இருவரும் தவிக்கிறார்கள்.
இதனிடையே தொழிலதிபர் அசோக்கின் மனைவியான அர்ச்சனா விற்கு அருண் ( லிங்கா) என்றொரு முன்னாள் காதலன் இருக்கிறான். பேராசை பிடித்த அந்த அருண், ‘தன்னுடைய பணத் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால்… நாம் காதலித்துக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் உனது கணவருக்கும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவேன்’ என மிரட்டுகிறார். இதனால் அர்ச்சனா- முன்னாள் காதலன் மற்றும் கணவனுக்கு இடையே இரு தலை கொள்ளி எறும்பாக தவிக்கிறார்.
இந்நிலையில் அனு எனும் அந்த குழந்தையை கடத்தியது யார்? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? குழந்தை அனு அவருடைய பெற்றோர்களுக்கு உயிருடன் கிடைத்தாரா? இல்லையா? காவல்துறையின் விசாரணை என்ன? என்பது போன்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
மணி – அசோக் -அர்ச்சனா என்ற மூன்று கதாபாத்திரங்களும் வெவ்வேறு வடிவத்தில் பிளாக்மெயில் செய்யப்படுகிறார்கள். இதன் பின்னணியில் குழந்தை கடத்தலை மையப்படுத்தி… இப்படத்தின் எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதையை அமைத்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார் இயக்குநர். அதிலும் முதல் பாதி நிறைவடைவதற்கு முன் வரும் 20 – 25 நிமிடங்கள் பார்வையாளர்களுக்கு அசலாகவே இருக்கை நுனி- நக கடிப்பு நிமிட அனுபவங்கள் உண்டாகிறது.
இரண்டாம் பாதியில் இன்னும் கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டாலும்… அதை வேறு திசையில் பயணிக்கச் செய்து, அதிலும் ஓரளவு வெற்றி பெறுகிறார் இயக்குநர். ஆனால் கடைசி இருபது நிமிடங்கள் பார்வையாளர்களை வழக்கமான சினிமாவாக உணர வைத்து.. படத்திற்கு பலவீனத்தையும் உண்டாக்குகிறார்.
இருப்பினும் ஒன்றரை மணி தியாலங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு பரபரப்பான அனுபவத்தை வழங்கியதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினரை பாராட்டலாம்.
மணி எனும் வாகன சாரதி வேடத்தில் நடித்திருக்கும் ஜீ. வி. பிரகாஷ் குமார் கதாபாத்திரத்தை உள்வாங்கி அற்புதமாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் குறிப்பாக எமோஷனல் வெளிப்படும் இடங்களில் தடுமாறுவது அப்பட்டமாக தெரிகிறது.
அசோக் எனும் தனவந்தர் வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு மெருகூட்டுகிறார். அதிலும் தன் மனைவியின் மனம் தவிப்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஆதரவாக செயல்படுவது போன்ற நடிப்பு இயல்பாக இருப்பதால்… ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அர்ச்சனா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிந்து மாதவி பல இடங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தி இது சினிமா என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார்.
அருண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் லிங்கா வில்லத்தனமான நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகிறார்.
ரேகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேஜு அஸ்வினி, திரை தோற்றம் குறைவு என்றாலும், கதையை வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரம் என்பதால் ரசிகர்களின் மனதை கவர்கிறார்.
ஒருவருக்கு நெருக்கடி ஏற்படும் தருணங்களில் குறுக்கு வழியில் பயணிப்பது சரி என்று மனம் சொல்லும் உளவியலை இப்படத்தின் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. இதற்காக குழந்தை கடத்தல் என்ற ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்கள். இதை முடிந்தவரை விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறார்கள். திரைக்கதையில்… காட்சி மொழியில்… பல போதாமைகள் – இல்லாமைகள் – லாஜீக் மீறல்கள் – இருந்தாலும் படமாளிகை அனுபவம் என்பது ஓரளவிற்கு நிறைவை தருகிறது.
இயக்குநருக்கு ஒளிப்பதிவாளர் – பின்னணி இசையமைப்பாளர் – படத்தொகுப்பாளர் – ஆகியோர் தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கியதால்… ரசிகர்களின் பாராட்டையும் பெறுகிறார்கள்.
பிளாக்மெயில் – பரபரப்பு… விறுவிறுப்பு…

