இலங்கையில் காரோட்ட பந்தயவீரர்களில் ஒருவரான கந்தன் பாலசிங்கம் தனது 74 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
உலகளாவிய ரீதியில் மனிதர்களின் உயிர்களை பறித்தெடுக்கும் கொரோனா என்ற அரக்கன் கந்தன் பாலசிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை.
திறமையான காரோட்ட வீரராக மாத்திரம் அல்லாது, தொழில்சார் கார் திருத்துனராகவும் கந்தன் பாலசிங்கம் பிரபல்யம் அடைந்து இருந்தார்.
1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடியில் பிறந்த கந்தன் பாலசிங்கம், 1999 ஆம் ஆண்டு, கொக்கல சுப்பர் குரோஸ் கார் பந்தயத்தில் முதற் தடவையாக பங்கு பற்றி தனது திறமையினை வெளிப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து , எஹெலிய கந்த, திஸ்ஸ மகாராம ,கட்டுக்குருந்த, பன்னல, மீரிகம, குருணாகல், அநுராதபுரம், எம்பிலிபிட்டிய, கல்துப, மின்னேரியா, வெசில், சென்ஜேம்ஸ், பொக்ஸ் கில் நுவரெலியா, ரதல்ல, மாகஸ்தோட்ட, பத்தரமுல்ல, பெலவத்த,குக்குல்கல ஆகிய இலங்கையின், அனைத்து முக்கிய காரோட்டப் பந்தயங்களிலும் கந்தன் பாலசிங்கம் தனது அதீத ஆற்றல்களை வெளிப்படுத்தி இருந்தார்.
காரோட்டத்தின் சிங்கமாக வர்ணிக்கப்பட்ட அன்னார், வருடாந்தம் 20 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளையும் பதிவு செய்து இருந்தார்.
அன்னாரின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நெதர்லாந்தில் 2008 இன்டர் நெசனல் மினி மீட்டடிங்கில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.