கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பிமல் ரத்நாயக்கவை துறைமுக அபிவிருத்தி அமைச்சு விடயதானத்தில் இருந்து நீக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. கொள்கலன்கள் விடுவிப்பு குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்த சிவில் விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சு பிறிதொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்கலன்கள் விவகாரத்தினாலா அவர் துறைமுக அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கலன்கள் விவகாரத்துடன் தொடர்புடைய நபரை விலக்கி, முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றுள்ளது.
சிறந்த தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். புதிய துறைமுக அமைச்சர் துறைமுகங்களை சிறந்த முறையில் மறுசீரமைப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.