இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் பிஎம் நரேந்திரமோடி என்ற பெயயரில் உருவாகி உள்ளது. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. இதில் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். மனோஷ் ஜோஷி அமித்ஷாவாகவும், பொம்மன் இரானி ரத்தன் டாடாவாகவும் நடித்துள்ளனர். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். லெஜண்ட் குளோபல் ஸ்டூடியோ சார்பில் சுரேஷ் ஓபராய், சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11ந் தேதி முதல் மே 19ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேதிக்கு இடையில் அதாவது ஏப்ரல் 12ந் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் நரேந்திரமோடியின் மக்கள் நலத் திட்டங்கள். அரசியலில் அவர் வளர்ந்த விதம் குறித்து அதிகமாக காட்டப்படுகிறது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு எதிரா வழக்கு தொடரப்படலாம் என்றும் தெரிகிறது.