ஐக்கியநாடுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்து இலங்கை உட்பட நாடுகள் சில ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.
ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையின் தற்போதைய தலைவர் ஐநா அறிக்கையாளருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் குறித்து வெளியிட்டுள்ள கவலையை நாங்கள் எதிரொலிக்கின்றோம் என மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை பொலிவியா பிரேசில் சிலி சீனா கியுபா தென்னாபிரிக்கா ஸ்பெய்ன் பாலஸ்தீனம் உட்பட பல நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களும் சுயாதீன ஐக்கியள நாடுகள் நிபுணர்கள் பணியாளர்கள் மற்றும் விசேட முகவர் அமைப்புகளிற்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படும் தாக்குதல் குறித்து கவலை வெளியிட்டிருந்தன என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கும் இந்த தேவையற்ற நியாயமற்ற தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்களின் நியாயபூர்வதன்மை மற்றும் நம்பகதன்மையை குறைமதி;ப்பிற்கு உட்படுத்த முயல்கின்றன என தெரிவித்துள்ள இந்த நாடுகள் குறிப்பாக சர்வதேச சட்டங்கள் பாரியளவில் மீறப்படுவதை அம்பலப்படுத்துபவர்கள் இவ்வாறான சமூக ஊடக தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நியமித்த சுயாதீன நிபுணர்கள் என்ற அடிப்படையில் விசேட அறிக்கையாளர்கள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பழிவாங்கல்கள் இன்றி தங்கள் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
1967ம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிற்காக ஐநாவின் விசேட அறிக்கையாளருக்கான ஆணைக்கான எங்கள் ஆதரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம் யூத எதிர்ப்பு,வன்முறை பயங்கரவாதம் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம் இந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளன.