சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவகையான தொந்தரவுகளை தடுப்பதற்காக தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளும்போது புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுவது பாடசாலையை இலக்குவைத்தாகுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாந்து தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவகையான தொந்தரவுகளை தடுப்பதற்காக தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளும்போது புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுவது பெரும்பாலும் பாடசாலையை இலக்குவைத்தாகும். தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட இருக்கும் தண்டனைச் சட்டக்கோவையின் (19ஆவது அத்தியாயம்) திருத்தச் சட்டமூலமும் அவ்வாறானதாகும்.
இந்த சட்டமூலம் தொடர்பில் ஒருசில அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து மிகவும் அருவருக்கத்தகதாகவே நாங்கள் காண்கிறோம். 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் பாலியல் ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் எந்த தடையும் இல்லை என தெரிவித்திருந்தனர்.அதேபோன்று ஓரின சேர்க்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்திந்ததை சமூகம் என்ற அடிப்படையில் கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயமாகும்.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் பாடசாலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கிறார். ஆனால் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவது நூற்றுக்கு 80 வீதம் பாடசாலையை இலக்குவைத்தாகும். இந்த சட்ட திருத்தம் காரணமாக பாடசாலையின் ஒழுக்கத்தை பாதுகாப்பது பிரச்சினையாக அமைவதுடன் ஆசிரியர்கள் தங்களின் தொழிலை பாதுகாத்துக்கொண்டு இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு கொடூரமான முறையில் தண்டனை வழங்குவதை தடை செய்யவேண்டும் . அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒழுக்கத்தை பாதுகாக்க முடியாதவகையில், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டம் கொண்டுவந்து, நாட்டின் கலாசாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் அரசாங்கம் கண்டுகொளளாமல் செயற்படுமாக இருந்தால்., அதுதொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
அதனால் இந்த சட்டமூலம் இன்னும் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படாததால், இந்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு. திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய இடங்கலில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.