பல்டி – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : எஸ் டி கே பிரேம்ஸ் & பினு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : ஷேன் நிகாம், சாந்தனு பாக்யராஜ் , பிரீத்தி அஸ்ராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா மோகன் மற்றும் பலர்.
இயக்கம் : உன்னி சிவலிங்கம்
மதிப்பீடு : 2.5/5
தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நட்சத்திர நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் வெளியாகும் 25ஆவது படம்- சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்திருக்கும் படம்- கபடி எனும் விளையாட்டின் பின்னணியிலான படம்- கேங்ஸ்டர் படம்- இணையதள பிரபலமான இசைக் கலைஞர் சாய் அபயங்காரின் இசையில் வெளியாகும் முதல் படம்- இப்படி வெளியீட்டிற்கு முன் பல எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய இந்த ‘பல்டி’ திரைப்படம் – ரசிகர்களை உற்சாகத்தில் ‘பல்டி’ ( குட்டி கரணம்) அடிக்க வைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழக- கேரள மாநிலத்தின் எல்லை பகுதியான கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியை கதைக்கள பின்னணியாக கொண்டிருக்கும் இதில் பஞ்சமி ரைடர்ஸ் எனும் கபடி குழுவில் உதயன்( ஷேன் நிகாப்) , குமார் ( சாந்தனு பாக்யராஜ்) மற்றும் அவனது இரண்டு நெருங்கிய நண்பர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு முறை பொற்றாமரை எனும் கபடி குழுவை போட்டியில் தோற்கடித்து கோப்பையை வெல்கிறார்கள். பொற்றாமரை குழுவின் முக்கிய பிரதிநிதி ஒருவர்.. அந்த குழுவின் தலைவரான பைரவனிடம் ( செல்வராகவன்) பஞ்சமி குழுவில் உதயன், குமார், அவருடைய இரண்டு நண்பர்கள் ஆகிய நால்வரின் ஆட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. அவர்களை நம் அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க… அதை அவரும் ஆமோதிக்க.. பிறகு உதயன், குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அவர்கள் பணத்திற்காக பொற்றாமரை குழுவிற்காக ஆட சம்மதிக்கிறார்கள். இந்தத் தருணத்தில் பொற்றாமரை குழுவினை தோற்கடிக்க வேண்டும் என்பதனை தங்களுடைய லட்சியமாக கொண்டிருக்கிறார்கள் சோடா பாய்ஸ் குழுவினர். இந்த அணிக்கு தலைவர் சோடா பாபு( அல்போன்ஸ் புத்திரன்) . நடைபெற்ற போட்டியில் பொற்றாமரை குழு வெற்றி பெற… பொற்றாமரைக் குழுவில் திடீரென்று இடம் பிடித்த உதயன், குமார் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை சோடா பாபு குறி வைக்கிறார்.
இதனிடையே குறிப்பிட்ட நிலப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக பொற்றாமரை பைரவன் – சோடா பாபு – ஜி-மா ஆகியோரிடையே ஆதிக்க மனப்பான்மை எழுகிறது. இதில் பொற்றாமரை பைரவனுக்கு ஆதரவாக சூழ்நிலை காரணமாக உதயன், குமார் அவரது இரண்டு நண்பர்கள் பணியாற்ற.. இவர்களை எதிர்க்க ஆளில்லாத நிலை உருவாகிறது. இந்தத் தருணத்தில் உதயன், குமார் ஆகிய இருவரது கண் எதிரே பொற்றாமரை பைரவன் கந்துவட்டி வணிகத்திற்காக அவர் கையாளும் மனித துன்புறுத்தலை பொறுத்துக் கொள்ள இயலாமல்… அங்கிருந்து வெளியேற துடிக்கிறார்கள்.
ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அவர்களால் உணர முடிகிறது. இந்தத் தருணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை புதிதாக தொடங்க பொற்றாமரை பைரவன் திட்டமிட.. அந்த த் திட்டத்திற்கு உதயன், குமார் குழு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்க… இதனால் ஆத்திரமடையும் பொற்றாமரை பைரவன்- உதயன் மற்றும் அவரது நண்பர்களை அழிக்க திட்டமிடுகிறார். அவரது திட்டம் நிறைவேறியதா? உதயன்- குமார் இடையேயான நட்பு என்ன ஆனது? போன்ற விடயங்களை உணர்வுபூர்வமாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதியில் நாயகர்கள் அறிமுகம்- வில்லன்கள் அறிமுகம்- கதாநாயகி அறிமுகம்- அழுத்தமில்லாத காதல் காட்சி- என இலக்கே இல்லாமல் பயணிக்கிறது. இரண்டாவது பாதியில் கதையின் நாயகர்கள் தாங்கள் வலிமையான சமூக விரோதி ஒருவருக்கு அடியாளாக பணிபுரிகிறோம் என்பதை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள் … என ஓரளவு கதை இருந்தாலும், வில்லன்களின் பின்னணி குறித்தும்… அவர்களுக்கு இடையேயான அதிகாரப் போட்டி குறித்தும்… பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்கப்படாததால்… நாயகர்களின் கடும் உழைப்பு வீணாகிறது.
இந்த படைப்பின் பிரதான அம்சம் எக்சன் காட்சிகள் தான். எக்சன் காட்சிகளில் கதாபாத்திரங்களின் குணாதிசியத்திற்கு ஏற்றது போல் துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும்… அவை நீளமாக இருப்பதால் ஒரு எல்லைக்கு மேல் திகட்ட தொடங்குகிறது.
உதயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷேன் நிகாம் – அந்த கதாபாத்திரத்திற்காக பின்பற்றும் பிரத்யேக உடல்மொழி.. ரசிகர்களை கவர்கிறது. காதல் காட்சிகளிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும், தன்னுடைய அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
குமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தனு பாக்யராஜ் பல இடங்களில் கதாபாத்திரத்தின் வெளிப்பாட்டை துல்லியமாக வெளிப்படுத்த இயலாமல் தடுமாறுகிறார்.
காவேரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி வித்தியாசமான ஒப்பனையில் அழகாக இருக்கிறார். குறைவான காட்சியில் தோன்றினாலும் தன் பங்களிப்பை திருப்திகரமாக நிறைவு செய்கிறார்.
பொற்றாமரை பைரவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் தன் வழக்கமான வில்லத்தனம் கலந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
சோடா பாபு எனும் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் தோற்றம் ரசிக்க வைக்கிறது.
ஜி- மா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பூர்ணிமா மோகன் இந்திரஜித் அழுத்தமாக எழுதப்படாத கதாபாத்திர வடிவமைப்பின் காரணமாக அவருடைய அனுபவம் மிக்க நடிப்பு பயனற்று போகிறது.
சாய் அபயங்காரின் பாடல்கள் ( ஜாலக்காரி…) படமாளிகையில் ரசிகர்களை உறுத்தவில்லை என்றாலும்… பின்னணி இசை பல இடங்களில் கதையோட்டத்திற்கு தடையாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரசிகர்களுக்கு பெரிய ஆறுதலையும், நல்லதொரு காட்சி மொழி விருந்தையும் வழங்குகிறார்.
விளையாட்டில் பேரார்வம் கொண்ட இளைஞர்கள்… பணத்தாசை காரணமாக அவர்களுக்கே தெரியாமல் நிழல் உலகிற்குள் சென்று விடுவதும்.. அதிலிருந்து வெளியேறுவது குறித்தும் உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கும் பல்டி- ரசிகர்களின் எதிர்பார்ப்பும் …படைப்பாளிகளின் வழங்குத்தனமும்… ஒரே புள்ளியில் சேராத அதிசயம் நிகழ்கிறது.
பல்டி – குல்ஃபி